Thursday, 20 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 13

அவன் நாட்டு நவிரமலை முதலானவற்றின் பெருமையினைச் சொல்கிறேன், கேளுங்கள். என்று சொல்லிக்கொண்டு நூலாசிரியர் கூறத் தொடங்குகிறார்.

  • வேளை (வேள் நன்னனை) நினைத்து நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள்.
  • அவன் நாட்டில் நவிரமலை இருந்தது.
  • நஞ்சுண்ட சிவனின் கோயிலும் அங்கு இருந்தது.
  • இதன் ஆற்றலை எண்ணி உலகம் அஞ்சிக் கிடந்த காலம் அது.
  • இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழைக் கொண்டவன் நன்னன்.
  • அவனது முன்னோர் பின்பற்றிய நெறி பிறழாது இவனும் பகைவரை நூழிலாட்டி வென்ற தன் வீரர்களுக்குக் கொடை நல்கும் கடப்பாடு உடையவனாய் விளங்கினான்.
  • அவனது அரண்மனை மூதூரைச் சுற்றி மதிலும் அகழியும் இருந்தன.
  • அதன் புகழைப் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு அவர்களை வேல்நிழல் புலவர் என்கிறார் பாடலாசிரியர். 
கொடுந்தாள் முதலை
வளைந்த கால்களை உடைய முதலை

  • இரையைத் தேடி வளைந்த காலை உடைய முதலைகள் கல்லில் ஏறும் நீரலை மோதும் ஆய்ந்த அகழி இருக்கும்.  
  • அடுத்து மலை போல் வானளாவிய மதில் இருக்கும்.
  • அவன் மூதூரைப் பலரும் புகழ்கின்றனர்.
  • அந்தப்புகழ் அவர்களுக்குச் செல்வக் கிடக்கையாக மாறிவிட்டது. மேலும் அந்தப் புகழ்மாலையைக் கேட்டுக் கேட்டு அவ்வூர் மக்கள் வெறுத்துப்போய்விட்டனர்.

நன்னனைப் புலவர் ‘வேள்’ என்கிறார்.
வேள் என்னும் சொல் முருகனைக் குறிக்கும்.
முருகனைச் சேஎய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இவன் சேய்நன்னன் எனக் குறிக்கிடப்படுகிறான்.
இவை இவனது பெயர் பற்றிய விளக்கங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,             
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்  
ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும்,                85
இகந்தன ஆயினும், தெவ்வர் தேஎம்  
நுகம் படக் கடந்து, நூழிலாட்டி,               
புரைத் தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்குக்      
கொடைக் கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்,       
இரை தேர்ந்து இவரும் கொடுந் தாள் முதலையொடு         90
திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்,         
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி,     
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்,    
கேள் இனி, வேளை நீ முன்னிய திசையே:   

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.