Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 1

உயிர்த்தூம்பு
களிறு போல் உயிர்க்கும் தூம்பு
கொம்பு
பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார்.

கூத்தர் கூட்டத்தில் பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள்

பேரியாழ் (பாடலடி 37) மீட்டும் பாணன் (பாடலடி 40) தன் இசைக் கருவிகளைத் துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு செல்கிறான்.

கலப்பை
கலம் என்னும் சொல் பொது வகையில் இசைக் கருவிகளையும், சிறப்பு வகையால் யாழையும் குறிக்கும். எனவே இவற்றை வைத்திருக்கும் பை கலப்பை.
முழவு
யாழோசை மழை பொழிவது போல எல்லாராலும் விரும்பப்படும் தன்மையதாக இருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல இருக்கும்.
ஆகுளி
யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை. (கஞ்சரா?)
பாண்டில்
வெண்கலத்தை உருக்கிச் செய்த தாளம்
உயிர்த்தூம்பு
யானை பிளிறுவது போல உயிர்ப்பொலி தரும் கொம்பு. அதன் வளைவமைதி தன் தலையைப் பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும் மயிலின் பீலிபோல் அமைந்திருந்தது.
குறும்பரந்தூம்பு
மெல்லிய இரங்கல் ஓசை தரும் ஊதுகொம்பு.
குழல்
அழைத்திழுக்கும் ஒலிதரும் குழல்.
(கண்ணன் குழலோசை ஆடுமாடுகளை அழைத்திருத்தியதை இங்கு நினைவு கூரலாம்.)
தட்டை
ஒருபுறம் கோலால் உரசி இழுத்தும் மறுபுறம் கோலால் தட்டியும் இசை எழுப்பும் உருமிமேள வகை. (சப்பளாக் கட்டையுமாம்)
எல்லரி
மோத ஒலிக்கும் பெரிய தாளவகை
பதலை
கடம் என்று நாம் கூறும் பானை.
மற்றும் பல.

இவற்றை யெல்லாம் வேரில் காய்த்துத் தொங்கும் பலாக்காய் போலப் பாணர்கள் சுமந்து சென்றனர்.


பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து,    
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,           
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,        
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு,             5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,         
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,              
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,             
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,            
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,         10
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,        
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,       
நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர்       

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி