Tuesday, 14 April 2015

சிறுபாணாற்றுப்படை, உறந்தை - பகுதி 6

அவன் உறந்தையும் வறிது என்னும்படி வளம் கொடுத்தான்
தாமரை
மகளிர் முலை போல்
உறையூரில் உண்ணத்தக்க நல்ல நீரைக் கொண்ட பொய்கை. அதன் கரையில் நீர்ப்பக்கமாக விரிந்த கடம்பு மரம். அம் மரத்தில் நிறைந்த மாலைகள் தொங்குவது போன்று பூத்திருக்கும் பூக்கள். அந்தப் பூக்கள் நீரில் உதிர்ந்தன. உண்ணும் நீரில் அவை மிதப்பதால் குளமே ஓவியம் போலக் காட்சி அள்ளித்தது. தரையில் மேயும் தம்பலப்பூச்சிகள் (கோவம்) போல நீரில் மிதக்கும் கடப்பம்பூக்கள் காற்றலையில் நகர்ந்துகொண்டிருந்தன. அதில் மகளிரின் முலை போலத் தாமரை மொட்டுகள் வெளிவந்து பூத்தன. அவை தெய்வ வழிபாட்டுக்கு மட்டும் பயன்படும் தெய்வத்தாமரைப் பூக்கள்.    
அவற்றில் பூவின் நடுவில் இருக்கும் கொட்டைகள். மகளிர் தம் மாசுமருவற்ற கைகளில் மருதாணி வைத்துச் செந்நிறம் ஆக்கிக்கொண்டது போல தாமரை இதழ்களுக்கு இடையே பொதிந்திருக்கும் செம்பொன் நிறம் கொண்ட கொட்டை. அந்தக் கொட்டையில் உறங்கும் ஆண் பெண் வண்டுகள் காம இன்பத்தில் காமரப்பண் பாடின. இப்படிப்பட்ட குளநீர் பாயும் வளவயல்களைக் (பணை) கொண்டதுதான் உறையூர்.
இந்த நாடு குணபுலம் எனப்பட்டது. இதனை மரபுரிமையில் ஆண்டுவந்தவன் செம்பியன். தேரில் செல்லும் பழக்கமுடைய இவன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். இவன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது. மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர்.

பாட்டு

நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த              
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,        
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்               70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்,    
வரு முலை அன்ன வண் முகை உடைந்து
திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன      
சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை,    75
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து,            
காமரு தும்பி காமரம் செப்பும்   
தண் பணை தழீஇய தளரா இருக்கைக்              
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்          
ஓங்கு எயி்ல் கதவம் உருமுச் சுவல் சொறியும்        80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,        
நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்             
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே: அதாஅன்று,

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.