Monday, 13 April 2015

சிறுபாணாற்றுப்படை, மதுரை - பகுதி 5

கண்ணைப் போல் தோற்றம் கொண்டது வேப்பிலை
வேப்பிலை பாண்டியனின் தலைமாலை
எனவே இது
கண்ணார் கண்ணி (கண் ஆர் கண்ணி) கண் போன்ற கண்ணி
மதுரை வறிது என்னும்படி வழங்கினான்
உமணர் உப்பு விற்கச் செல்லும் வரிசையோடு அவர்களின் உமட்டியரும் குழந்தைகளும் செல்வர். வழியில் மந்தி குழந்தைகளுடன் சேர்ந்து கிலிகிலுப்பை விளையாடும்.
  • உமணர் - தாங்கி இழுக்கும் காளை மாடுகள் பூட்டிய வண்டியை உமணர்கள் ஓட்டிச் செல்வர். தலையில் அணியும் மாலை கண்ணி எனப்படும். நுணாக் கட்டையைக் கடைந்து செய்த கண்ணியை அவர்கள் தம் காதுகளைத் தொடும் வகையில் தலையின் மேல் அணிந்திருப்பர். மார்பிலும் அணிந்திருப்பர். முதிர்ந்த நுணாமரப் பொந்துகளில் தேன் கூடு கட்டும். நிறைமதி நாளிலும், மறைமதி நாளிலும் தேனீக்கள் தாம் சேர்த்த தேனைப் பருகிவிடும். அவ்வாறு பருகியபின் கடையப் பயன் படுத்தப்படும் நுணா மரக்கிளை வெட்டப்படும் அது இளமையும் முதுமையும் கொண்ட பதமான நுணாமரத் துண்டு. அதில்தான் நுணாக்கட்டை-மாலைக்கு வேண்டிய துண்டுகளைக் கடைந்தெடுப்பார்கள்.
  • உமணர் மக்கள் - அவர்களது மக்களை ஒத்த மந்திகள் சிறுவர்கள் விளையாடும் கிலுகிலுப்பையை எடுத்துத் தாமும் அவர்களைப் போலவே ஆட்டி விளையாடும்.
  • உமட்டியர் - உமட்டியர் முத்துப் போன்ற பற்களுடன் நகைமுகம் காட்டுவர். தம் குழந்தைகளைத் தம் தோளில் கட்டியிருக்கும் தூக்குத் துணியில் தம் வயிற்றுப் பகுதியில் உட்கார வைத்துக் கொள்வர். மந்தி ஆட்டும் தனது கிலுகிலுப்பையை வாங்கித் தரும்படி குழந்தை அழுதால் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து கிலுகிலுப்பையை மறைத்து மறக்கும்படி செய்வர். குழந்தையைத் தோளில் மறைக்கும்போது அவர்களின் தலையிலுள்ள ஐம்பால் ஒப்பனைதான் கண்ணைக் கவரும். குழந்தை பிறந்து சில நாள்களேயான புனிற்றிளம் பெண்களேயாயினும் அவர்களது வயிறு வற்றி இடை சிறுத்துப் போய்தான் இருக்கும். இவர்கள் வாழுமிடம் கடலலை மோதும் கொற்கை நகரம். - ( உமணர் – ஒப்புநோக்குக – பெரும்பாணாற்றுப்படை அடி 46 – 65 )
  • கொற்கை - கொற்கையைத் துறைமுகமாகவும், மதுரையைத் தலைநகரமாகவும் கொண்டு ஆள்பவன் செழியன். தமிழகத்தின் தென்பகுதியில் இருப்பதாலோ, இனிய புலமாக இருப்பதாலோ அவனுடைய நாடு தென்புலம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்தத் தென்புலத்தைக் காப்பாற்றும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.
பாட்டு
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து        
அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத       
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,               
செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி,          
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                                55
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்             
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம்               
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,               
தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற             60
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்      
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார்       
மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை,
கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்;          65
தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்         
மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று,  


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.