Sunday, 12 April 2015

சிறுபாணாற்றுப்படை, விறலியர் - பகுதி 2

விறலியர் மெய்யழகு
  • மழை போல் கதுப்பு
  • கதுப்பு போல் மயில்
  • மயில் போல் சாயல்
  • சாயல் போல் நாய்நாக்கு
  • நாய்நாக்கு போல் (கால்)அடி
  • அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை)
  • குறங்கு போல் உயரும் வாழை
  • வாழைப்பூ போல் ஓதி (கொண்டை)
  • ஓதி போல் பூக்கும் வேங்கை
  • வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு
  • சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை
  • முலை போல் பெண்ணை (பனங்காய்)
  • பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்)
  • எயிறு போல் குல்லைப்பூ
  • குல்லை போல் முல்லை
  • முல்லை சான்ற கற்பு
இப்படிப் பாடினியின் அழகு அடுக்கி வரும் உவமை (அடுக்குவமை) இதில் காணப்படும் புதுமை.

பாலை நெடுவழியில் முல்லை சான்ற கற்பினளாகிய பாணனின் மனைவியும் செல்கிறாள். பாலை நிலத்து மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. அவற்றின் அடியில் வரி வரியாகக் கிடக்கும் அருநிழலில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாறிய பின் செல்கிறாள்.
அவளது கூந்தல், மேனியின் சாயல், உள்ளங்கால், காலின் தொடை, தலையில் போட்டிருக்கும் ஓதிக் கொண்டை, மேனியின் பொலிவைக் காட்டும் பொன்னிறத் தேமல், மார்பகப் பெண்பாலுறுப்பு, பல் ஆகிய உறுப்புக்கள் பொலிவுடன் பூத்துக் குலுங்குவதால் அவள் மாரிக் காலத்து மழைத்துளி பட்டவுடன் பூத்துக் குலுங்கி மணக்கும் குல்லை என்னும் குட்டிப் பிலாத்திப் புதர்ச்செடி போல் பொலிவு பெற்றிருக்கிறாள்.

  • கதுப்பு – அவளது கூந்தலில் எண்ணெய் கனிந்துள்ளது. அதுபோலத் தூறல் மழையில் நனைந்தாடும் மயிலின் தோற்றத்தைத் தருகிறது.
  • சாயல் – மயில் தன் நீல நிறத் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல் அவளது மேனியின் பொலிவழகு துவண்டு ஆடுகிறது. இவள் பெண்மயில். அது ஆண்மயில். எந்தச் சாயலழகு எந்தச் சாயலழகில் குளிக்கிறது என்று தெரியாத வியப்புநிலை அது.
  • அடி – சாயல் நிழலில் இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப் போல் அவளது உள்ளங்கால், அழகு, அமைப்பு, மென்மை போன்றவற்றால் அவளது அடியானது நாயின் நாக்கைப் போல் இருந்தாலும், அவளது காலில் மருதாணி பூசி மலர்ந்து போய் இழைக்கோடுகள் இருப்பதால் இவளது அடியின் பொலிவுக்கு நாயின் நாக்கு ஈடாகாது.
  • குறங்கு – அவளது அடியிலிருந்து உயர்ந்து, பெண்யானையின் நிலத்தைத் தொடும் துதிக்கை போன்று அவளது தொடை இருக்கிறது. யானைக்குத் துதிக்கை ஒன்றுதான். இவளுக்கோ நெருக்கமான இரண்டு தொடைகள்.
  • ஓதி – அவளது தொடையைப் போல் மலைவாழைத் தண்டு இருக்கிறது. அந்த வாழையின் பூவைப்போல அவளது கொண்டை இருக்கிறது.
  • சுணங்கு – அவள் கொண்டை பூத்திருக்கும் கொத்துக் கொத்தாக வேங்கை பூத்திருக்கிறது. வேங்கை பூத்திருப்பது போல் அவள் முலைமுகத்தில் சுணங்குத் தேமல் பூத்திருக்கிறது. தேன் உண்ட வண்டுகள் களிப்பினால் தேமலையும் பூ என்று மயங்கி மொய்த்துத் தேன் இல்லாத்தால் அரற்றி ஓலமிடுகின்றன. .   
  • முலை – அவளது தேமல் போல் கோங்கமரம் புதிய பூவை அவிழ்த்து வைத்திருக்கிறது. கோங்கம் பூ மொட்டுப் போல் அவளுக்கு முலை.
  • பல் – அவளது முலையைப் போன்ற தேங்காயுடன் தென்னை நிமிர்ந்துள்ளது ( அவளது முலையைப் போன்ற காயுடன் பனை பருவம் கொண்டுள்ளது. ) தேங்காய்க்குள்ளே இருக்கும் தேங்காயைப் போல் அவளுக்குப் பல். ( பனை நுங்கு போல் பல் ) இனிமையாலும் ஈரத்தாலும் இளந் தேங்காயும், பனை நுங்கும் அவளது பல்லை ஒத்திருந்தன.
  • குல்லை - அவளது பல்லைப் போல் குல்லை ( குட்டிப் பிலாத்தி ) பூத்திருக்கிறது.
  • முல்லை = கற்பு – மாரியின் மழைத்துளிக்கு மட்டுமே பூக்கும் குல்லை போல் முல்லை பூத்திருக்கிறது. முல்லை என்னும் காத்திருக்கும் கற்புநெறி கொண்டவள் பாணன் மனைவியாகிய விறலி.
பாட்டு
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ     
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி,           
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,             
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன்           15
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்          
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,       
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,               
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என,      20
மால் வரை ஒழுகிய வாழை: வாழைப்             
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,       
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,            
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,       
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி,        25
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,              
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்    
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்;             30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் 


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.