Friday, 17 April 2015

சிறுபாணாற்றுப்படை, முல்லைநில விருந்து - பகுதி 19

முல்லைநிலத்தில் விருந்து
எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும்.
  • இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல்.
  • மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி. கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர்.
  • கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது.
வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது?
அவரையில் பவளப்பூக்கள் பூத்தன
  • இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும்.
  • கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும்.
  • முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும்.
  • காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும்.
  • பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்.
அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு.
  • அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். .
  • தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது. ( உத்தராயணம் )
திறல் வேலால் கேணி தோண்டியும் ,விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்…

பாட்டு
பைந் நனை அவரை பவழம் கோப்பவும்,        
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும், 165
கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்,            
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,            
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,         
முல்லை சான்ற முல்லை அம் புறவின்,       
விடர் கால் அருவி வியல் மலை மூழ்கிச்      170
சுடர் கால்மாறிய செவ்வி நோக்கி,        
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,      
விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்           



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.