Thursday, 16 April 2015

சிறுபாணாற்றுப்படை, நுளையர் பரதவர் விருந்து - பகுதி 18

எயிற்பட்டினத்தில் நுளையர் பரதவர் விருந்து
நுளைமகள் என்பவள் மீனவப் பெண். அவள் ஒட்டகம் தூங்கி எழுந்தது போல் வரும் அலைகள் கொண்டு வந்த மணம் கமழும் விறகுகளைக் கொண்டு சமைப்பாள். கரும்புகையும் செந்தீயும் கமகமக்கச் சமைப்பாள். அவள் பருத்த தோளழகு உடையவள். வானத்து நிலா இவள் முகத்தைப் பார்த்துத் தனக்கு இப்படிப்பட்ட அழகு இல்லையே என ஏங்கும் முக அழகினைக் கொண்டவள். அதில் வேலின் கூர்மை போல் நோக்கும் கண்பார்வை கொண்டவள்.

  • சமைக்கும்போது பருத்த தோள்களைக் கொண்ட அவள் முகத்தைக் கரும்புகை கவ்வும். என்றாலும் கொழுந்து விட்டு எரியும் செந்தீ அவளது முகத்துக்கு ஒளி உண்டாக்கும். இந்த முக அழகைப் பார்க்க வானத்திலுள்ள மதியம் ஏங்கிக் கிடக்கும். காரணம் அவள் முகத்தில் கூர்மையான வேல் போன்ற கண்கள் இருந்தன. ( வானத்து மதிக்கு மேகம் புகை. விண்மீன் நெருப்புக் கட்டிகள் நிலாவுக்கு வெளிச்சம் தரும் நெருப்புத் தணலின் கட்டிகள். )
அவள் பழமைப்பட்டு நுரைத்து வரும் தேறலைப் பரதவர்களுக்குத் தருவாள். அப்போது நீங்கள் கிடங்கில் கோமானைப் பாடவேண்டும். ஒருவர் குழல் ஊதுகையில் மற்றவர் அவன் புகழைப் பாடவேண்டும். தன் அரசனின் புகழ் கேட்டு உங்களுக்கும் அரியல் தேறல் தருவாள். பரதவர்களோடு சேர்ந்து உங்களையும் உண்ணுமாறு செய்வாள்.
அத்துடன் கருவாட்டையும் சுட்டுத் தருவாள்.
இந்த விருந்தினை நீங்கள் ஆங்காங்கே பெறுவீர்கள்.

  • கிடங்கில் என்பது இப்போதுள்ள திண்டிவனம். கிடங்கில் கோமான் என்பவன் நல்லியக்கோடன். எயில்பட்டினம் அவன் நாட்டுத் துறைமுகம்.
உண்டபின் அவர்களோடு சேர்ந்து நீங்களும் கிடங்கின் கோமகனாகிய நல்லியக் காடனைப் பாடுங்கள். குழல் ஊதுங்கள். அவன் கட்டவிழும் பூமாலை அணிந்திருப்பதைப் பாடுங்கள்.
பாட்டு
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன   
வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் 155
கரும் புகைச் செந் தீ மாட்டி, பெருந் தோள்,    
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து,         
நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த     
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,           
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,             160
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி,       
அறல் குழல் பாணி தூங்கி அவரொடு,             
வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்:  


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.