Thursday, 16 April 2015

சிறுபாணாற்றுப்படை, தந்த பரிசில் - பகுதி 16

வீட்டில்
இது சிதல் தின்னும் மரச்சுவர்
பாடலில் சிதல் புற்று எழுந்த மண்சுவர்
தந்தான் - தருவான்
அன்று எங்கள் வறுமை
  • எங்களது வீட்டுநாய் எங்கள் வீட்டுச் சமையலறையில் குட்டி போட்டிருந்தது. கண்ணைக்கூடத் திறவாத அந்த நாய்க்குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கக் கவ்விச் சுவைத்தன. தாய்நாயின் மடியில் பால் இல்லாத்தால் வலி பொறுக்க முடியாமல் அது தன் குட்டிகளையை பார்த்துக் குரைத்தது.
  • வைரம் பாய்ந்தது போன்ற எங்களது வீட்டுச் சுவர் கட்டுடைந்து கறையான் அரித்த புழுதியோடு காளான் பூத்திருந்தது.
  • உடுக்கை அடித்துக்கொண்டு ஆடும் என் மனைவியின் வயிறு பசியால் ஒடுங்கி இளைத்த இடையோடு ஒட்டிப்போயிருந்தது.
  • அவள் குப்பையில் முளைத்திருந்த வேளைக் கீரையைத் தன் வளைந்த நகத்தால் கிள்ளி வந்தாள். உப்புக்கூட இல்லாமல் அதனை வேகவைத்தாள்.
  • இதைப்போய் சாப்பிடுகிறார்களே என்று அறிவுக் குறைந்த மடவோர் ஏளனம் செய்வார்களே என்று எண்ணி வாயில் கதவைச் சாத்தி வைத்துவிட்டுப் பெருஞ் சுற்றத்தாரோடு கூடியிருந்து உண்ணக்கூட முடியாமல் ஏதோ பிசைந்து கவளமாக்கிக் கன்னத்தில் கண்ணீர் வழிய விழுங்கிக் கொண்டிருந்தோம்.
இதுதான் எங்கள் குடும்பத்தின் அந்நாளைய அழிபசி வருத்தம்.
( இந்த விளக்கத்தின் மூலமாகக் குடும்பத்தின் வறுமைநிலை விளக்கப்படுகிறது )

அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. 
அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான்.
  • அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான்.
  • யானையோடு தேரும் தந்தான்.
இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம்

நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்.
பாட்டு
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை             130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,      
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்               
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த,               
பூழி பூத்த புழல் காளாம்பி:            
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், 135
வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த   
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,             
மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,      
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட; பொழி கவுள்,  140
தறுகண் பூட்கை, தயங்கு மணி மருங்கின்,  
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி;  
யாம் அவண் நின்றும் வருதும். நீயிரும்,        
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்     
செம்மல் உள்ளமொடு, செல்குவிர் ஆயின்,                145


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.