Thursday, 16 April 2015

சிறுபாணாற்றுப்படை, மாவிலங்கை - பகுதி 15

நல்லியக்கோடன் இவ்வாறு யானைமேல்
சென்றதால் காலில் களிறு உகைத்த தழும்பு
உடையவனாக இருந்தான்.
அக்காலில் கழல் அணிந்திருந்தான்.
மாவிலங்கை
  • தொன்மாவிலங்கை என்பது இலங்கைத் தீவு. நன்மாவிலங்கை என்பது தமிழ் நாட்டிலுள்ள ஓர் ஊர். இலங்கைத் தீவில் கருவுற்ற ஒருவன் தமிழ் நாட்டிலுள்ள ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து தலைமை ஏற்றபோது தன் தலைநகருக்கு மாவிலங்கை என்னும் பெயரைச் சூட்டினான்.
  • நல்லியக்கோடன் காலத்தில் இப்பகுதியில் ஓவியர் குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். ஓ என்னும் சொல் ஏரியின் மதகுகளை அடைக்கும் பலகையைக் குறிக்கும். ஏரியை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் ஓவியர் எனப்பட்டனர். (ஓ – ஓவம் – ஓவியம் – ஓவியர் என்றும் எண்ணிப் பார்க்கலாம். )


  • நல்லிநக்கோடனின் மாவிலங்கை நாட்டில் ஓடிய ஆற்றில் நாகம், அகில், சந்தனம் முதலான மரக்கட்டைகள் மிதந்து வந்தன. அம் மரங்கள் நீராடுவோருக்கு மிதவைப் புணைகளாகப் பயன்பட்டன.
  • காதலன் தோளைத் தருவிக்கொண்டு விளையாடுவது போல மகளிர் அம் மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு விளையாடினர்.
  • பொருபுனல் ஓடிற்று என்று பாடல் கூறுவதால் அது காட்டாறாக இருக்க வேண்டும்.
  • ஓவியர் குடி குற்றவடு நேராதபடி அரசாண்ட குடி. வாய்மை காத்துப் புகழோடு விளங்கிய குடி. பகைவர்கள் அஞ்சும்படி புலிபோல் வலிமை பெற்று விளங்கிய குடி.
  • நல்லியக்கோடனின் கால்களில் யானையைக் குதிக்காலால் தட்டி ஓட்டிய கால் தழும்பு இருந்தது. அதில் அவன் வீரக் கழலை அணிந்திருந்தான். காலிலோ களிற்றுத் தழும்பு. கைகள் தந்ததோ பிடிக்கணம்.
  • பெய்யும் மழை நீரைச் சிதறுவது போல இவனது கைகள் தாரை வார்த்துத் தரும் நீரில் பிடிக்கணங்கள் (பெண்யானைகள்) கொடைப் பொருள்களாகக் கொட்டித் தரப்பட்டன. கூத்தாடுவோருக்கு அந்தக் கொடை யானைகள் வழங்கப்பட்டன.
நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம்.
அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான்.
தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.
பாட்டு
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்        
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய           
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய  
நல் மா இலங்கை மன்னருள்ளும்,        120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்,              
உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன்           
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி,       
பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கை,        
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை          125
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,           
தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும், பாடி,          
முன் நாள் சென்றனம் ஆக இந் நாள் 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.