Sunday, 12 April 2015

சிறுபாணாற்றுப்படை, வேனில் காலம் - பகுதி 1

வெயில் உருப்புற்ற வெம்பரல்
வெயிலின் சூடு ஏறிய பரல் கற்கள்
நடக்கும் பாணரின் காலைக் கிழித்தன 

வேனில் காலம் - காலை வேளை – பாலைநில வழி
சிறிய யாழை, ஏழு நரம்பு கொண்ட யாழை இசைப்பவர் சிறுபாணர்.
  • வேனில் காலத்தில் காலை நேரத்தில் இளவெயில் காயும்போது பாலை நிலத்தில் சிறுபாணன் தன் சுற்றத்தாருடன் சென்றான்.
  • மாநில மடந்தைக்கு முலை மலை. ஆறு அவளது மார்பில் தொங்கும் ஆரம். ஆற்றங்கரையை உடைத்துக்கொண்டு நெடுந்தொலைவிலிருந்து வரும் காட்டாறு துன்புற்றுக் கொண்டிருந்தது. அதாவது நீர் இல்லாமல் வறண்டு போயிருந்தது.
  • அந்த ஆற்றின் மணல் படிவுகள் நிலமடந்தைக்குக் கூந்தல். ஆற்றங்கரை மலர்ச் சோலைகளில் பூத்திருக்கும் மலர்களைக் குயில்கள் குடைந்து உண்ணும்போது உதிர்க்கும் பூக்கள் ஆற்றின் அறல் மணலைப் போர்த்திக் கிடந்தன.
  • அந்தப் போர்வை மகளிர் இடுப்பில் ஆணியும் காழகம் ( = பாவாடை ) போல் சுருக்கம் சுருக்கமாகக் காணப்பட்டது.  ( காற்றால் அறுபட்டுப் படிந்திருக்கும் மணல் படிவில் உதிர்ந்த பூக்கள் பாவாடை சுருக்கத்திற்கு உவமை. )
  • ஆற்றில் கிடக்கும் பருக்கைக் கற்கள் நடந்து செல்லும் பாணன் பாடினியரின் கால்களை உருத்தின, கிழித்தன. அவர்கள் மெல்ல மெல்ல நடந்து சென்றனர். அவர்களது நடை பார்ப்பவர்களுக்குச் சுவையாக இருந்தது.
  • அது வேனில் காலம் வெயிலின் சூடுதான் வேனிலுக்குப் பதம். காலை ஞாயிறு தன் கதிர்ச்சுடரை வீசி வாட்டத் தொடங்கியது. பாலைநில வழியில் அவர்கள் சென்றனர்.
( பால மரத்தின் பதநிழல் மட்டுமே ஆறுதல் தரும் நிலம் பாலை நிலம். )


பாட்டு         

மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை      
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,              
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று,
கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த       
புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து,          5
கதுப்பு விரித்தன்ன காழக நுணங்கு அறல்   
அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து,            
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப,           
வேனில் நின்ற வெம் பத வழி நாள்      
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப,                10
பாலை நின்ற பாலை நெடு வழிச்           


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.