Tuesday, 17 March 2015

புறநானூறு 224

கழற்றி வைத்த அணிகலன்கள்
கரிகாலன் இறந்தபோது
அவனது மனைவியர்
தம் அணிகன்களை
இப்படித்தான் கழற்றி வைத்தனர்
கரிகாற் பெருவளத்தான் இறந்தான். அவனது மகளிர் அணிகலன்களைக் களைந்தெறிந்தனர். அதுகண்ட புலவர் கருங்குழல் ஆதனார் பாடுகிறார்.

  • காட்டரண்களைக் கடந்து சென்று போர்களில் வெற்றி கண்டது
  • தன் மனைவிமாருடன் வந்து பாணர் சுற்றத்தாருக்குக் கள்ளைத் தந்து அவர்களைப் பேணியது
  • வேதவேள்வி அறிந்தவர் முன்னின்று புகழ் பாட, மெல்லியல் கொள்கையும் குறையற்ற கற்பும் கொண்ட தன் மகளிர் சூழ்ந்திருக்க, சூரியனின் ஒளிவட்டம் போல் வட்டமிட்டு வந்து எருவைக் கழுகுகள் உண்ணும் உணவினை வெற்றித்தூண் நட்டு வேதவேள்வி செய்து முடித்தது
ஆகியவற்றை நன்கு அறிந்த அறிவுடையாளன் கருகாற் பெருவளத்தான். அவன் இறந்தான். அவனை இழந்த இந்த உலகம் இரங்கத் தக்கது.
அருவியில் நீர் இல்லாமல் உயிரினங்கள் அஞ்சும்படிப் பயிரினங்கள் கருகிக் கிடக்கும் வறண்டு போன வேனில் காலத்தில் தன் ஆனிரைகள் (ஆடுமாடுகள்) உண்பதற்காக கூர்மையான வாங்கரிவாளை உடைய கோவலர் பூக்கள் உதிரும்படி வேங்கைமரத் தழைகளை வெட்டிப்போடுவது போலக் கரிகாற் பெருவளத்தானின் மகளிர் தாம் பூண்டிருந்த அணிகலன்களைக் கழற்றி எறிந்தனர்.
அவர்கள் இரங்கத் தக்கவர்கள்.
அந்தோ!

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த        5
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு,
பருதி உருவின் பல் படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:           10
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்                15
கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.
  
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.