Monday, 22 December 2014

புறநானூறு # 146

இக்காலத் தாலி
பேகன் மனைவி கண்ணகி கழுத்தில் இது போன்ற
திருந்திழை மட்டும் இருந்தது
பேக! உன் செல்வங்கள் உன்னிடமே இருக்கட்டும். அவற்றைப் பெற நான் விரும்பவில்லை. என் யாழில் செவ்வழிப் பண் கூட்டி உன் நாட்டைப் பாடினேன். அதற்காக எனக்குப் பரிசில் தருவாயானால் உன் மனைவி தன் கூந்தலில் பூ சூடிக்கொள்ளும்படி அவளிடம் செல்ல உன் தேரில் குதிரைகளைப் பூட்டுக.
உன் மனைவி நீ உன்னை அவளுக்குத் தராமையால் நைந்துபோய் உடல் அழகு குலைந்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் தன் தாலி இழையைத் திருத்திக்கொள்ள வேண்டும். தோகைமயில் போன்ற தன் கூந்தலுக்குப் மணப்புகை ஊட்டிப் பூவைச் ணூடிக்கொள்ள வேண்டும். அதற்காக உன் தேரைப் பூட்டுக.
அதுவே நீ எனக்குத் தரும் செல்வமாக இருக்கட்டும்.

பாடல்

அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல
நல் நாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ      5
நல்காமையின் நைவரச் சாஅய்,
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன,
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ,
தண் கமழ் கோதை புனைய,        10
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே!

திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பேகனை அரிசில் கிழார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.