Friday, 12 December 2014

புறநானூறு # 125

மலையனும் சோழனும் சேர்ந்து போரிட்டுச்
சேரனை வென்றனர்
சோழனுக்கும் சேரனுக்கும் போர். மலையன் சோழனுக்குத் துணையாக நின்று போரிட்டான். சோழன் வென்றான்.
புலவர் சொல்கிறார்.
போரில் வென்றவனும் உன்னைச் சிறப்பாகப் பேசுகிறான். தோற்றவனும் நீ அவன் பக்கம் இருந்திலுந்தால் வென்றிருக்கலாமே என்று சிறப்பாகப் பேசுகிறான். நீயோ, உழுத எருது நெல்லை உழுதவனுக்குக் கொடுத்துவிட்டு வைக்கோலைத் தின்பது போல வென்றவன் தந்த பொருளை வாங்கிக்கொண்டு மகிழ்ந்திருக்கிறாய். உன்னைத் துணைவனாகப் பெற்றிருக்கும் நான், உன்னோடு சேர்ந்து, நூல் நூற்கும் பெண் வைத்திருக்கும் பஞ்சு போல் நெருப்பில் சுட்டு வெந்த புலால் உணவைப் பறிமாறிக்கொண்டு உண்ணலாம் என்று உன்னைக் காண வந்துள்ளேன். வெல்க உன் புகழ்.   

பாடல்

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
நள்ளாதார் மிடல் சாய்த்த   5
வல்லாள! நின் மகிழ் இருக்கையே.
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; 10
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத்  15
தோற்றோன் தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.    20

திணை வாகை; துறை அரச வாகை.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ஆங்கிலத்தில் இதன் செய்தி


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.