Wednesday, 10 December 2014

புறநானூறு # 120

வரகு விளைச்சல்

சூல் கொண்ட மயில் போல் வரகு கதிர் விடும்
பாரிமகளிர் இருண்டு திரண்ட கூந்தலை உடையவர்கள். அவர்களது தந்தை மூங்கில் ஒன்றோடொன்று மோதி ஓசை கேட்கும் மலையை உடையவன். புலவர்கள் பாடிப் பாடி நிறைவடையாத பண்பினை உடையவன். பகைவர் புறமுதுகு காட்டி ஓடக் கண்டு மகிழ்ந்த முருகப்பெருமான் போன்றவன். இவன் மாண்டுபோனான். இவனுக்குப் பின்பும் இவன் நாட்டுவளம் இவன் வாழ்ந்த காலத்தில் பயன்பட்டது போலவே பயன்படுமோ, பயன்படாதோ, தெரியவில்லையே!
பாரி நாட்டு வளம்

  • வெப்புள் என்பது சூடு பறக்கும் கோடைகாலத்தில் வேங்கை விளையும் நிலம். அந்த நிலத்தில் கார் காலத்தில் மழை பொழிய அதன் ஈரத்தில் புழுதி தோன்ற உழுவர். வரகு விதைப்பர். அது பயிராக வளரும்போது இடையே முளைக்கும் பல்லிச் செடிகளைக் களைந்து எறிவர். வரகு செழித்து வளரும். கருவுற்றிருக்கும் பெண்மயில் போல் உடல் விரிந்து கதிர் விடும். அக் கதிரில் அடி முதல் நுனி வரையில் வரகு-மணிகள் காய்த்திருக்கும். விளைச்சல் வெண்ணிறத்தில் தோன்றும். அதனை அறுப்பர்.  
  • தினை கொய்வர்.
  • வரகு அறுப்போர், தினை கொய்வோர் ஆகியோரின் ஆரவாரம் கேட்கும்.
  • அவரைக்காய் கொய்யும் பதம் பெற்றிருக்கும்.
  • நிலத்தில் புதைத்து ‘மட்டுத்தேறல்’ விளைந்திருக்கும்.
  • இவற்றையெல்லாம் குடிதோறும் பங்கிட்டுக்கொள்வர்.
  • நிலக்கடலை வேகவைத்துக்கொள்வர்.
  • சோறும் சமைத்துக்கொள்வர்.
  • தாலம் என்னும் வட்டில்-கலத்தில் போட்டுத் தோளில் சுமந்துசெல்வர். வேண்டும்போது உண்பர் (வாய்ப்பூசல் செய்துகொள்வர்).
இப்படிப்பட்டது அந்த நாட்டுவளம்.

பாடல்

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து,
பூழி மயங்கப் பல உழுது, வித்தி,
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,       5
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி,
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரிய,
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் 10
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு,
பெருந்தோள் தாலம் பூசல் மேவர,        15
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர்
பாடி ஆனாப் பண்பின் பகைவர்
ஓடு கழல் கம்பலை கண்ட    20
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே!

திணை பொதுவியல்துறை கையறுநிலை.
பாரி மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.