Friday, 14 November 2014

புறநானூறு 91 Purananuru 91

அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்கினான்
வெற்றிவாள் ஏந்தி பகைவர் போர்க்களத்திலையே மடியும்படி வென்ற வீரக்கழல் அணிந்தவன் அதியர் கோமான். அதியர் களிப்புக்காக நறவுக் கள்ளை உண்பவர்கள். இவன் போரிலே வென்ற திருவினைப் பொன்மாலையாக்கி அணிந்திருப்பவன். ‘அஞ்சி’ என்னும் பெயர் கொண்டவன்.
சிவபெருமான் பால் போன்ற வெண்ணிற நெற்றியைக் கொண்டவன். நீலமணி நிறம் கொண்ட தொண்டையை உடையவன்.
பெருமானே, நீ இந்தச் சிவபெருமான் போல நிலைபெற்று வாழ்வாயாக!
தொன்றுதொட்டுப் பெருமலை வெடிப்பு ஒன்றில் பெறுவதற்கு அரிதாக, ‘சிறியிலை நெல்லி’ப் பழம் ஒன்றை, உண்டால் சாகாமல் நீண்டநாள் வாழக்கூடிய அதன் தன்மையை உன் மனத்திலேயே வைத்துப் பூட்டிக்கொண்டு, நான் சாகாமல் நீண்டநாள் வாழவேண்டும் என்று எண்ணி என்னை உண்ணச் செய்தாயே. (அதனால் நீ சிவபெருமானைப் போல வாழ்க).

பாடல்

வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி  5
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கி,                          10
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி