Sunday, 9 November 2014

புறநானூறு 80 Purananuru 80

இது மேலைநாட்டு மற்போர்
இதனை மைந்துடை மல்லன் மதவலி முருக்கல் பாங்கோடு
கற்பனை செய்து பார்க்கலாம்
மல்லன் ஆமூர் அரசன்.
உடல் வலிமை மிக்கவன்.
ஆமூர் மல்லனின் தலைநகர்.
கள் விளைவிக்கும் ஊர்.
அங்குப் போர்.
எதிர்த்தவன் போர்வை அரசன் கோப்பெருநற்கிள்ளி.
தித்தன் (உறையூர் அரசன்) போரிட்டு வெல்லமுடியாத வலிமை மிக்கவன். (கோப்பெருநற்கிள்ளியின் தந்தை என ஆராய்ச்சியாளர்கள் காண்கின்றனர்)

மல்லன் உடல் மதமதப்பு (திமிர்) மிக்கவன். இவனும் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியும் மோதிக்கொண்டனர். மற்போர் நிகழ்ந்தது. போரிடும்போது கிள்ளியின் ஒருகால் மார்போடு மோதி மண்டியிட்டிருந்தது. மற்றொரு கால் பின்னிருந்து தாக்கும் படையை உதைத்து முறியடித்துக்கொண்டிருந்தது. பசியால் தென்னை மட்டை இரண்டு பக்கமும் வளையும்படி முறித்து இழுக்கும் யானை போலக் கிள்ளி போரிட்டுக்கொண்டிருந்தான். இதனைத் தித்தன் காண்பானாக என்கிறார் புலவர். (கிள்ளியின் வலிமையைத் தித்தன் உணராதிருந்தான் என்பது புலவர் கூற்றால் தெரியவருகிறது)

பாடல்

இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்           5
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே.

திணை தும்பை; துறை எருமை மறம்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.