Thursday, 6 November 2014

புறநானூறு 76 Purananuru 76

போர்களம்
தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகிறார்.
ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டுபோவதும் இயல்புதான். ஆனால் ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதனை இன்று கண்டோம். இதற்கு முன்பு கண்டதில்லை.
பசும்பூண் செழியனின் பெருமையையும் செம்மாப்பையும் அறியாமல் அவனை எதிர்த்துப் போரிடுவோம் என வந்த எழுவரின் கொட்டம் அடங்க வேப்பம்பூவும், உழிஞையும் சேர்த்துத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை முழக்கத்துடன் போரிட்டு அழித்தலை இன்றுதான் காண்கிறேன்.

பாடல்

ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,           5
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக,
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி,                               10
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே.

திணை வாகை; துறை அரச வாகை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.