Monday, 3 November 2014

புறநானூறு 71 Purananuru 71

சினைஇய (சினங்கொண்ட) மடங்கல்
மடங்கல் போல் சேரனும் சோழனும் சீரினார்களாம்
பாண்டியன் கூறுகிறான்
பாண்டியன் வஞ்சினம் கூறுகிறான்.

  • வேந்தர் (சேரன், சோழன்) இருவரும் என்னோடு போரிடுவேன் என்கின்றனர். சிங்கம் போல் சீறுகின்றனர். மடியாத ஊக்கம் அவர்களுக்கு. அடங்காத படையும் கொண்டுள்ளனர்.
  • அவர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி அவர்கள் தம் தேரோடு புறமுதுகிட்டு ஓடச்செய்வேன்.
அப்படிச் செய்யாவிட்டால்,

  1. விரும்பிப் பார்க்கும் இவளை (என் மனைவியை)ப் பிரிவேன் ஆகுக.
  2. என் அவைக்களம் அறநிலை திரியாதது. அதில் திறமில்லாத ஒருவனை நடுவராக அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிபவன் ஆவேன் ஆகுக.
  3. மையல் அரசன் மாவன் -1, கோட்டைக் காவலன் ஆந்தை 2, உரையாற்றல் மிக்க புலவன் அந்துவன் சாத்தன் -3, ஆதன் அழிசி,-4, வெஞ்சின வீரன் இயக்கன் -5 ஆகிய ஐந்து நண்பர்களோடும் (ஐம்பெருங்குழு)
  4. பிறரோடும்,
  5. கண் போன்ற நட்புறவாளர்களோடும்

  • கூடி மகிழ்ந்து வையை சூழ்ந்த நாட்டை ஆளும் மகிழ்ச்சியை இழப்பேன் ஆகுக.
இது ஒன்று மட்டும் அன்று.

  • உலக உயிரினங்களையெல்லாம் (மன்பதை) காக்கும் தென்புலங் காவல் பாண்டியன் குடியில் பிறக்காமல் மேட்டுத்தரிசு நிலங்களைக் காக்கும் அற்பக் குடியில் பிறப்பேன் ஆகுக.

பாடல்

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,
என்னொடு பொருதும் என்ப; அவரை
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த           5
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக;
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து,
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்    10
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த   15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர்
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!
               
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.