Sunday, 2 November 2014

புறநானூறு 69 Purananuru 69

பாணன்
பாண! உறையூர் மாடத்தில் உள்ள கிள்ளிவளவனிடம் சென்றால் அவன் வாயிலில் காத்திருக்க வேண்டியதில்லை. பொன்-தாமரை சூடாமல் திரும்பப் போவதும் இல்லை.

  • பாணன் – கையில் கடப்பாடுடைய யாழ், பாதுகாப்போர் இல்லாமையால் உடலில் பசி, இடுப்பில் கிழிசலைத் தைத்த ஆடை, இவற்றை மறைக்கக் கூச்சத்தோடு நடக்கும் நடை, குறிக்கோள் இல்லாதவன் உடம்பு போல் ஏங்கித் தவிக்கும் உறவினர் – ஆகியவற்றை உடையவன்.
உலகமெல்லாம் சுற்றி அலைந்த பின் என்னை வினவினால், சொல்கிறேன், கேள்.
மன்னர் பாசறையில் இருந்தபோது யானைகளைக் கொன்ற அவன் இப்போது உறையூர் மாடத்தில் இருக்கிறான்.

  • கிள்ளிவளவன் – ஓங்கிய வேலையுடைய அவன் பகைநாட்டுக்குச் செல்லப்போகிறான். தீ எரிவது போன்ற அணிகலன் பூண்டுள்ளான். அவனிடம் நீ சென்றால் வாயிலில் காத்திருக்காமல் பொன்னால் செய்த தாமரையை உனக்கு அணிவிப்பான். (வறுமையைப் போக்கிக்கொள்ளலாம்)

பாடல்

கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்      5
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,     10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்    15   
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
ஆடு வண்டு இமிராத் தாமரை            20
சூடாயாதல் அதனினும் இலையே.

திணை – பாடாண்;  துறை - பாணாற்றுப்படை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.