சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை - புலவர் மோசிகீரனுக்குக் கவரி வீசியது
முரசு
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல் வாரால் கட்டப்பட்டது.
மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக
பொன்னாலான உழிஞைப்பூவும்
அதனை அழகுபடுத்தியது.
குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது.
முரசுக்கட்டில்
முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்தது.
எண்ணெய் நுரை போல் அதில் மெத்தை இருந்தது.
அது முரசுக்கட்டில்
என அறியாமல்
புலவர் அதன்மேல் உறங்கிவிட்டார்.
முரசுடன் திரும்பிய
அரசன் புலவருக்குக் கவரி வீசினான்.
புலவர் சொல்கிறார்
அறியாது கட்டிலேறிய என்னை
இரு துண்டாக
ஆக்குவதை விட்டதே
நல்ல தமிழ்நெறி அறிந்த செயல்.
அதுவே போதுமானது.
அதுவே போதுமானது.
அதனோடு நிறைவடையாமல்,
பக்கத்திலே வந்து,
வலிமை மிக்க உன் தோள்களால்
அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி,
எனக்குக் கவரி வீசினாயே!
இந்த உலகத்தில் புகழ் உடையோருக்குத்தான்
மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள்.
அதற்கு மாறாக, (குற்றம் செய்த எனக்கே இந்த உலகத்தில்)
மேலுலக வாழ்வு தந்த செயலை என்னென்பேன்?
பாடல்
மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
குருதி வேட்கை உரு கெழு முரசம் 5
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; 10
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை 15
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?
திணை பாடாண் திணை;
துறை இயன்மொழி.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை
முரசுகட்டில் அறியாது
ஏறிய மோசிகீரனைத்
தவறு செய்யாது,
அவன் துயில் எழுந்துணையும்
கவரி கொண்டு
வீசியானை
மோசிகீரனார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு

அருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇனிது
Delete