Tuesday, 14 October 2014

புறநானூறு 43 Purananuru 43

நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவர்
புலவரும் மாவளத்தானும் வட்டு ஆடினர். புலவர் வட்டுக்காயை மறைத்து வைத்துப் பிழை செய்தார். வெகுண்ட மாவளத்தான் வட்டுக்காயால் மாவளத்தானை அடித்தான். புலவர் பார்ப்பானர். “உன் முன்னோர் பார்ப்பனர் நோகும்படிச் செய்யமாட்டார்கள். நோகச் செய்த நீ சோழன் மகன் இல்லைஎன்றார். இச் சொல்லைக் கேட்ட மாவளத்தான் தன் செயலுக்காக நாணினான். புலவர்நானே பிழை செய்தேன்என்று உண்மையைக் கூறி மாவளத்தானை வாழ்த்தினார்.
சோழர் குடியின் பெருமையைக் கூறும் புலவர் சிபி மன்னன் வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

  • அவிர்சடை முனிவர்கள் நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தவம் செய்வார்கள். வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு தவம் செய்வார்கள்.
  • இந்த முனிவர்களும் மருளும்படி புள்ளினங்களும் வாழும்படி சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட பருந்தின் பிடியிலிருந்து தப்பித் தன்னிடம் வந்த புறாவைக் காப்பாற்றுவதற்காக (அந்தப் புறாவின் எடைக்கு எடை தசை தரத் தன் தொடையிலிருந்து அறுத்துத் தந்தபோது எடை குறைந்தமையால் அதனை ஈடு செய்யும் பொருட்டுத்) தானே தன்னைத் துலாக்கோலில் நிறுத்த மன்னன் சிபி.
அவன் வழியில் வந்தவர் சோழர்.

  • பகைவரின் முரண்பாட்டை நீக்கிய தேர்வண் கிள்ளி (தேர்க்கொடையாளி நலங்கிள்ளி) தம்பி நீ.
  • வார்கோல் கொடுமர மறவர் (அம்பு வில் வீரர்) படையின் தலைவனே!
  • குதிரை வீரனே!
  • உன் பிறப்பில் ஐயம் ஊடையேன்.
ஆத்திமாலை அணிந்த உன் முன்னோர் பார்ப்பார் நோகும் செயல்களைச் செய்யமாட்டார்கள். இது (என்னை வட்டுக் காயால் அடித்தது சரியா? – என்று வெறுக்குபடி கூறினேன். அதனைக் கேட்ட நீ உனக்கு நான் செய்த பிழையைப் பொருட்படுத்தாமல், நீ பிழை செய்தது போலப் பெரிதும் நாணினாய்.

  • தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளும் செம்மாப்பு இந்தச் சோழர் குடிக்கு எளிது என்பதைக் கண்ணாரக் காட்டிநுள்ளாய்.
அதனால் காவிரியாறு குவித்துள்ள மேட்டுமணலின் எண்ணிமகையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்வாயாக.

பாடல்
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக்
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,                               5
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல்,          10
கொடுமர மறவர் பெரும! கடு மான்
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,      15
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,               20
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
               
திணை வாகை; துறை அரசவாகை.
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.