Friday, 10 October 2014

புறநானூறு 35 Purananuru 35

வியன்குடை வெயில் மறைக் கொண்டன்றோஅன்றே
வருந்திய குடி மறைப்பதுவே;
மூவேந்தர் ஆட்சியில் உன் அரசே ‘அரசு’ எனப் போற்றுதலுக்கு உரியது.
நாடு எனப் போற்றப்படுவது உன் காவிரி நாடே.
என்றாலும் ஒன்று கூற விரும்புகிறேன்.

  • உன்னிடம் முறை வேண்டும்போது எளிமையாகக் காட்சி தந்து சரியான தீர்ப்பைப் பெற்றால் மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று மக்கள் மகிழ்வர்.
  • உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று. குடிமக்களின் துயரைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே.
  • உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது.

  • மழை பொய்த்தாலும்
  • வருவாய் குறைந்தாலும்
  • இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும்
உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும்.

  • இதனைப் புரிந்துகொண்டு உனக்கு வேண்டியவர்களின் சொல்லைக் கேளாமல் காளை மாடுகளை போற்றி உழவு செய்யும் குடிகளின் சுமையை நீ குறைத்து அவர்களைப் பேணினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர்.

பாடல்

நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,   5
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல, 10
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து 15
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை 20
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, 25
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;  30
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.

திணை அது; துறை செவியறிவுறூஉ.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.