Friday, 3 October 2014

புறநானூறு 18 Purananuru 18

"நிலன் நெளி 
மருங்கில் 
நீர் நிலை 
பெருகத்
தட்டோர்"
செய்த
தடுப்பு
குடபுலவியனார் (குடபுலத்து இயம் முழக்குபவர்) பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறும் முதுமொழி என்னும் உலகியல் செய்தி கூறும் பாடல் இது.

  • கடலால் சூழப்பட்டுப் பரந்துகிடக்கும் உலகை முயற்சி வலிமையால் தனதாக்கிக்கொண்டு புகழை நிலைநாட்டிய திறனாளிகளில் யானை போன்றவனே!
  • ஒன்று பத்து என்று கோடி வரை அடுக்கிய பெருமை உடையதாக உன் வாழ்நாள் அமையட்டும்
  • வளமான மூதூரின் (மதுரை) வெற்றி-வேந்தே!
  • நீரில் தாழ்ந்திருக்கும் காஞ்சிப் பூவை வாளைமீன் கவ்வுதலும், ஆரல், வரால், செந்நிறக் கெடிறு மீன்கள் வளர்வதுமான அகழியும், வான் தோயும் மதிலும் கொண்டது உன் வளநகர்.
  • இறந்தபின் செல்லும் உலகத்துச் செல்வத்தை விரும்பினாலும், அரசர்களையெல்லாம் வென்று தனியொருவனாகச் சிறப்புப் பெற விரும்பினாலும், சிறந்த உலகின் புகழை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பினாலும் ஒரு தகுதி வேண்டும். அதைச் சொல்கிறேன் கேள்!
  • அதற்குத் தகுதி உள்ளவன் நீ.
  • உடம்பு நீர் இல்லாமல் வாழமுடியாது. உடம்புக்கு உணவு வழங்கியவர் உயிர் தந்தவராக மதிக்கப்படுவர். உடம்பு உணவின் பிண்டம். உணவு என்பது நிலம் நீர் ஆகியவற்றின் கொடை. நீரையும் திலத்தையும் சேர்த்து வைத்தவர் உடம்பையும் உயிரையும் படைத்தவர் ஆவார். விதைத்துவிட்டு வான்மழையை எதிர்நோக்கும் புன்செய் நிலமாயின் அரசன் முயற்சிக்குப் பயன்படாது. அதனால்
போரை விரும்பும் செழியனே!

  • நான் சொல்வதை ஏளனம் செய்யாமல் நிலம் நெளிந்து பள்ளமாய்க் கிடக்கும் இடங்களிலெல்லாம் நீர்நிலை பெருகும்படி தடுத்து நிறுத்தியவர் இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஆவர். அவ்வாறு நீரைத் தடுத்து நிறுத்தாதவர் இவ்வுலகில் பதியாதவர் ஆவார்.
நீ நீர்நிலைகளைப் பெருகச் செய்து உன்னை இவ் உலகில் நிலைநிறுத்திக்கொள்க!

பாடல்
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.