Friday, 3 October 2014

புறநானூறு 17 Purananuru 17

தொண்டி நகரைப் பெரிப்ளஸ் குறிப்பு
திண்டிஸ் எனக் குறிப்பிடுகிறது
காவல!
  • தெற்கில் குமரிமுனை, வடக்கில் வேங்கடமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல்இந்த எல்லைக்கு உட்பட்ட குன்று, மலை, காடு, நாடு ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு ஆணைப்படி நடக்கும்வண்ணம் கொடியனவற்றை நீக்கிச் செங்கோல் ஆட்சி நடத்தி, விளைவனவற்றை மட்டும் உண்டு, பிளவு இல்லாமல் ஆணைச் சக்கரத்தை உருட்டி முழுவதுமாக ஆண்ட வலிமை மிக்கவரின் வழித்தோன்றலாக நாடாளும் காவல!
தொண்டியோரைப் பொருது வென்ற காவல!

  • தாழம்பூக் குலை வணங்கும் அகன்ற வயல்வெளி, மலையில் வேலி கட்டிய நிலம், நிலவொளி போல மணல் பரந்துகிடக்கும் கானல்நிலம் கழியில் தீ எரிவது போல பூத்திருக்கும் (நெய்தல்) பூஆகிவற்றைக் கொண்டது தொண்டி.
பெரிய பொய்குழியில் விழுந்த ஆண்யானை தன் பெருமிதம் தோன்றக் குழியைத் தகர்த்தெறிந்துவிட்டுத் தன் சுற்றத்துடன் சேர்ந்துகொண்டதைப் போல,
நீ
பட்டிருந்த சிறை தளர்ச்சியுற்றிருந்தபோது, பலரும் பாராட்டும்வண்ணம் விடுவித்துக்கொண்டு சென்றதை உன் தாயத்தார் பாராட்டுகின்றனர்.
ஊக்கம் இருந்தால் உண்டாக்கிய மண்ணையும், இழந்துவிட்ட அணிகலச் செல்வத்தையும் திரும்பப் பெறலாம் என்பதை மெய்மைப்படுத்தும் வகையில் பெற்றாய்.

  • எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார், திண்ணியர் ஆகப் பெறின்திருக்குறள்
பெருமானே!

  • கொடியையும் கோட்டையையும் இழந்து சிறைபட்டுக் கிடக்கிறோமே என்று பெரிதும் சினம் கொண்டு நோக்கி வெளிப்பட்டு வந்து உன்னைப் பிற அரசர்கள் பணியத் தொடங்கும் உன் ஆற்றலைக் காண வந்திருக்கிறேன். பெரும.
அளவில்லாமல் கொடை வழங்கும் குட்டுவர் கோவே!

  • மழைமேகம் போல் உலவும் உன் படைமலையைக் கண்டு உன்னோடு மாறுபட்டோர் நடுங்கும்படி உன் கொடைமுரசு கடல்நீரை வானுக்குக் கொண்டு சென்று முழங்கும் இடி போல முழங்குவதையும் அம் மழைமேகம் போல் நீ கொடை வழங்குவதையும் கேட்டும் கண்டும் மகிழ வந்திருக்கிறேன், பெரும.

தெண்கழிமிசைத்
தீப் பூ

பாடல் இப் பூவை
இவ்வாறு
குறிப்பிடுகிறது
பாடல்
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
'உண்டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும்,
'ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
உடன்று நோக்கினன், பெரிது' எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!
               
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.