Thursday, 2 October 2014

புறநானூறு 15 Purananuru 15

இவை ஆற்றில் குளிக்கும் யானைகள்
பாடலில் குறிப்பிடப்படுவது
குடிநீர்க் குளத்தைக் கலக்கும் யானைகள்
புலவர் மன்னனைக் வினவுகிறார்.
பகைவரை அறித்து வசைபாட வாழ்ந்தவர் பலரா, இல்லை, தூண் நட்டு வேள்வி செய்து புகழ் பெற்றவர் பலரா?

  • நீ சினம் மிக்கவன். அதனால் பகைவர் நாட்டில் தேர் நடத்தினாய். அந்தத் தேர்க்கால் பள்ளத்தில் கழுதை-ஏர் பூட்டி உழுதாய்.
  • அவரது கோட்டைகளை அழித்தாய்.
  • பறவைகள் மேயும் விளைவயல்கள் உன் குதிரைக் குளம்புகளால் மிதிபடத் தேரோட்டினாய்.
  • நடை பயில்வதும், பருத்த முதுகுக் கொட்டேறியும், பரந்த காலடியும், அழிக்கும் பார்வையும், ஒளி வீசும் கொம்புகளையும் கொண்டதுமான உன் யானைகளை ஊர்மக்கள் குடிப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட குளத்தில் குளித்துத் திளைக்கும்படி செய்தாய்.
இப்படிப்பட்ட சீற்றம் கொண்டவன் நீ.

  • பொன்-கேடயமும் வேலும் ஏந்தி பகைவர் நடத்திய காலாள் படையை வெல்லும் ஆசையோடு போரிட்டும், ஏமாந்தும் மக்கள் வசை பாட வாழ்ந்தவர் பலரா? அல்லது
  • நால்வேதச் சிறப்புக் குழியில் நெய் ஊற்றி ஆவி பொங்க வேள்வி செய்து தூண் நட்டுச் சிறப்பெய்தியவர் பலரா?
கனை-முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே!    

  • உனக்கு யார் பலர்?
  • (இருவரும் இல்லை.)

இந்தப் பாடலில் ‘அன்ன சீற்றத்து அனையை’ என்பது வரை வழுதியின் போராற்றலை நெட்டிமையார் புகழ்கிறார்.
அடுத்து வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் என்பது வரை போர் இகழப்படும் செயல் என்கிறார்.
அடுத்து யூபம் நட்ட வியன்களம் பலகொல் என்பது வரை வேதநெறியால் யாது பயன் எனப் பெற வைக்கிறார்.
இறுதியில் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்றவன் எனக் குறிப்பிட்டு மக்களை மகிழ்விப்பதே நெறி என்னும் அறத்தை நிலைநாட்டுகிறார்.
பாடல்

கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.
               
திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.