Sunday, 28 September 2014

புறநானூறு 3 Purananuru 3

கருங்கை ஒள்வாள்
பெரும்பெயர் வழுதி

பெருங்கையானை
இரும்பிடர்த் தலை
இருந்து
போரிட்டவன்
  • நீ கவுரியர் மரபில் வந்தவன். அவர்கள் முழுமதி போல் உருவம் கொண்ட வெண்கொற்றக் குடையால் ஆளும் மண்ணிலுள்ள அனைத்துக்கும் நிழல் தந்தவர்கள். முரசு முழக்கத்துடன் ஆட்சிச் சக்கரத்தை உருட்டியவர்கள். நெஞ்சில் நேயம் கொண்டு இல்லை என்று சொல்லாமல் கொடை வழங்கியவர்கள்.
  • நீ கற்புக்கரசியின் கணவன்.
  • உன்னைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பார்கள். (ஏனென்றால்) மருந்தில் கூற்றம் என்னும் நிலப்பகுதியை வென்றாய். யானைத் தலையில் இருந்துகொண்டு போரிட்டு வென்றாய். அந்த யானை பொன்னாலான ஓடைக் கவசத்தை நெற்றியில் கொண்டது. வலிமை மிக்கது. மதம் பொழிவது. கயிற்றில் கட்டிய மணி கொண்டது. அதனை உதைத்துக்கொண்டுதான் நீ அதன் தலையில் அமர்ந்திருந்தாய்.
  • உன்னை ஒன்று வேண்டுகிறேன். நிலமே மாறினாலும் நீ சொன்ன சொல் தவறாமல் வாழவேண்டும்.
  • நீ பொன்னாலான வீரக்கழலைக் காலில் அணிந்தவன். ஈரச்சந்தனம் புலர்ந்த மார்பை உடையவன்.
  • உன்னை நயந்து இரவலர் வருவர். ஊர் இல்லாத, வாழ முடியாத, நீர் இல்லாத நீண்ட வழியைக் கடந்து வருவர். வன்கண் ஆடவர் பதுங்கியிருந்து அம்பு விட வீழ்ந்தவர்களை உண்ணும் பருந்து உன்னமரத்தில் காத்திருக்கும் வழியில் வருவர்.
  • அவர்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து அவர்களின் வறுமையைப் போக்குவதுதான் உன் வலிமை.
பாண்டியன்
*
வழுதி என்றால் 
இவனையே குறிக்கும்
*
மருந்தில் கூற்றம் 
போரில் 
வெற்றி கண்டவன்
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகை, கவுரியர் மருக!
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து,
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்;
பொலங் கழற் கால், புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை
இரும்பிடர்த்தலையார் பாடியது. இவர் பாடலிலுள்ள தொடரால் பெயர் பெற்ற புலவர்.

காலம் : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)
ஆங்கிலத்தில்இதன் செய்தி

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.