Saturday, 27 September 2014

புறநானூறு 2 Purananuru 2

அந்தி 
அந்தணர் 
அருங்கடன் இறுக்கும்
முத் தீ
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

சேரன்
*
அறிவியல்
*
பாரதப் போர்
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.
 • நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும்-திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ.
 • உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா?
 • தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபாலாருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன் நீ.
 • பால் புளித்தாலும், பகல் இருளானாலும், நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக.
 • இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலைகொள்வதாகுக. 
புறநானூறு பழைய உரை - தமிழ் இணையக் கல்விக் கழகப் பதிவு
வரலாறு
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
இந்தப் அடிகளில் கூறப்பட்டுள்ள வரலாறு இருவேறு கோணங்களில் கூறப்படுகிறது.

ஐவர் = பஞ்ச பாண்டவர்
ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்
இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான்.
இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன்.
இது ஒரு கோணம்.

ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்
நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)
பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.
இது மற்றொரு கோணம்.

இது நிகந்த வரலாற்றைக் காட்டும் காலக் கண்ணாடி.

நிலத்தைக் கைப்பற்றும் ஆசையால் தும்பைப் பூச் சூடி, நூற்றுவர்-கன்னன் பஞ்சவரைத் தாக்கினான். இருவரும் போர்களத்திலேயே மாண்டனர். அப்போது இரு படையினர்க்கும் பாகுபாடு காட்டாமல் உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்துப் பேணினான்.

இருவரும் போர்க்களத்தில் மாண்டனர் என்று பாடல் கூறுகிறது. பாரதப் போரில் நூற்றுவர் மட்டுமே மாண்டனர் ஐவர் நாடாண்டனர் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.

ஒப்புநோக்குக - மதுரைக்காஞ்சி அடி 775 விளக்கம்

காலம் : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

சங்ககால அறிவியல்
 • ஐம்பெரும்பூதம் என்பதை பஞ்சபூதம் என்பர். நிலம், விசும்பு, வளி, தீ, நீர் என அவை இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 • மண்ணின் திணிவே நிலம். நிலம் விசும்பை ஏந்திக்கொண்டுள்ளது. விசும்பை வளி தடவுகிறது. வளிக்காற்றில் தீ பொருந்தியுள்ளது. தீயோடு முரண்பட்டது நீர். (இந்த இரண்டு மட்டும் இணையினும் விலகிவிடும்.)
 • நிலம் தாங்கும் ஆற்றல் கொண்டது. விசும்பு நிலத்தை வளைத்துக்கொண்டுள்ளது. காற்று வலிமை உடையது. (மூச்சை இழுத்துக் கட்டிக்கொண்டுதான் பலுவைத் தூக்குகிறோம்) நீர் கொடையாக வழங்கப்படும் பொருள். (வழங்கப்படாத நிலைமையும் உண்டு).

இக்கால அறிவியல்

 • விசும்பில் நிலம் மிதக்கிறது. நிலத்தில் உள்ள வளி உயிரினங்களை வாழச்செய்யும். தீ விண்மீன்களின் மூச்சு. இதன் எதிரி நீர்

1 comment:

 1. நன்றி ஐயா. புறநானூற்றின் 2வது பாடலை படிக்கும் போதே பாரதப்போர் பற்றிய விளக்கத்தை கண்டு ஒருவாறு சந்தேகித்தேன். புலியூர் கேசிகன் அவர்களின் உரை கூட அப்படித்தான் இருந்தது. ஆயினும் மனம் நம்ப மறுத்தது. வரலாறு ஓரளவு படித்துள்ளேன். உங்கள் சதகர்ணி விளக்கம் புறநானூற்று காலத்துக்கு சரியாக பொருந்துகிறது. எனக்கும் இது தான் சரியாக இருக்கும் என மனதிற்குப் படுகிறது. நன்றி ஐயா.

  ReplyDelete

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.