Sunday, 27 April 2014

தீட்டும் நாக்கு, தீட்டும் கல்

புலவர் பரணர் பாடுகிறார். (அகநானூறு 356)
சங்ககாலம்
கி.மு. முதல் நூற்றாண்டு.

நன்னன்  அரசனின் ஊர் பறம்பு.. 
அங்குக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. 
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் 
அதாவது பட்டை தீட்டுபவன் அரக்கில் ஒட்டவைத்துள்ள கல். 

தெருவில் வந்த அவன் அவள் கையைப் பற்றினான். 
அவள் 'அன்னோ' எனக் கூச்சலிட்டாள். 
அவன் கையை விட்டுவிட்டான். 
அவன் விட்டுவிட்டானே என்பது அவள் ஏக்கம். 
அவள் சொல்கிறாள்; 
அன்னையை அழைத்த என் நாக்கு பட்டை தீட்டும் கல் போல் தேயட்டும்.
ஊரன்
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
பொற் தொடி முன்கை பற்றினனாக,
''அன்னாய்!'' என்றனென்; அவன் கை விட்டனனே,
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற் போல் நாவினேனாகி, மற்று அது
செப்பலென் மன்னால், யாய்க்கே;  அகம் 356

புலவர் மாமூலனார் பாடுகிறார். (அகநானூறு 1)
பொதினி என்பது இக்காலப் பழனி மலையின் சங்ககாலப் பெயர்.
அதனை முருகன் என்பவன் ஆண்டுவந்தான்.

உருவக் குதிரை என்பது குதிரைமலை.
இக்காலத்தில் அது குதிரைமூக்கு என்னும் பெயருடன் உள்ளது.
Kudremukh (Kannada: ಕುದುರೆಮುಖ) also spelled Kuduremukha is a mountain range and name of a peak located in Chikkamagaluru district, in Karnataka,
இந்தக் குதிரைமலை மக்கள் மழவர்.
இந்த மழவர் மன்னன் முருகனைத் தாக்கினர்.
முருகன் மழவரை அவர்களது குதிரைமலை நாட்டுக்கே சென்று சிதைந்தோடச் செய்தான்.

அறுகோட்டு யானை பொதினி
ஆனைமலை ஆறு முகடுகளைக் கொண்டது.
அவற்றில் ஒன்று பொதினி(பழனி)மலை.


வேள் என்றும் வழங்கப்பட்ட முருகன் ஆவியர் குடிமகன்.
இவனது ஊர் பொதினி
இங்கு மணிக்கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.

மணிக்கல்லை ஒரு கொம்பு நுனியில் வைக்கப்பட்டுள்ள அரக்கில் ஒட்ட வைத்துக்கொண்டு மணியைச் சாணைக்கல்லில் தேய்த்து வேண்டிய எண்ணிக்கையில் பட்டை தீட்டிக்கொள்வர்.

அரக்கு கல்லைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.
அரக்கை உருக்கித்தான் கல்லைப் பிரிக்க வேண்டும்.

அரக்கும் கல்லும்போல் பிரியமாட்டேன் என்ற தலைவன் இன்று பிரிந்து பொருள் தேடச் செல்கிறானே - என்று தலைவி கலங்குகிறாள்.
''வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்'' என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழி!  - அகம் 1


Wednesday, 23 April 2014

சிவம்? சவம்? தவம்? அவம்?

'சிவ்' என்னும் உணர்வு சிவம்
சிவம் சாவக் கிடப்பது சவம்
சிவமும் சவமும் அற்ற உணர்வுநிலை தவம்
சிவமே தன்னை மறந்து சவ(உடல்) உணர்வோடு இயங்குவது அவம்


ஆண்குறி சிவம்
ஆணின் 'சிவ்'
சிவ் < சீவன்
சீவன் தரும் உடலுறுப்புபெண்குறி சிவம்
பெண்ணின் 'சிவ்'
பெண்சிவத்தில் ஆண்சிவம்
சீவன் தரும் உறுப்புகள்
அம்மை அப்பன் அம்மையப்பன்
சிவம் இல்லாத சவம்தவம்
தவம் செய்வார் தம் கருமம் செய்வார்
திருக்குறள்
அவம்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு
திருக்குறள்

யாரை, யார், எப்படிப் பாடினார்

சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலர். 
அவர்களால் பாடப்பட்ட மன்னர்களும், வள்ளல்களும் பலர். 
அவர்கள் என்ன பாடினார்கள் என்பதைக் காட்டும் 
ஒருபக்கப் பெருங்கட்டுரை ஒன்று 
உருவாகி வருகிறது. 

இதனைச் சொடுக்கி
அனைவரையும் தேடுபொறி மூலம்
ஒரே பக்கத்தில் கண்டு
அறிஞர்கள்
காலநிரல் செய்துகொள்ளலாம்

Wednesday, 16 April 2014

அகம், புறம்

சங்ககாலப் பாடல்கள் அகம், புறம் என இரண்டு பொருள்-கூறுகளாகப் பாகுபடுத்தப்பட்டிருந்தன.
வெளிப்படையாகப் பேசமுடியாமல் மனம் என்னும் அகத்துக்குள் அடங்கிக் கிடக்கும் ஆண் பெண் உறவு தொடர்பான செய்திகளைக் கூறுவது அகப்பொருள்.
அகப்பொருள் அல்லாதவை புறப்பொருள்.

படத்தில் இடப்புறம் காணும் அங்கை போன்றது அகப்பொருள். வலப்புறம் காணும் புறங்கை போன்றது புறப்பொருள்.
தொல்காப்பியம் அகப்பொருளில் உள்ள திணைகள் 7, புறப்பொருளில் உள்ள திணைகள் 7 எனப் பகுத்துக் காட்டுகிறது.

அகப்பொருளிலில் அன்பால் உறவு கொள்ளும்  5 திணைகள் உள்ளன. இவற்றைத் தொல்காப்பியம் அன்பின் ஐந்திணை என்று குறிப்பிடுகிறது.


இவற்றில் பாலைத்திணை படத்தில் காட்டப்பட்டுள்ள பெருவிரலின் இயக்கம் போலச் செயல்படுவது. ஏனைய 4 விரல்கள் போல் நானில ஒழுக்கங்கள் அமையும்.

அங்கையை மூடிப் பொருளை மறைக்க முடியும். புறங்கையை மூடமுடியாது.

கைக்கிளை என்னும் ஒருதலைக் காமமும், பெருந்திணை என்னும் பொருந்தாக் காமமும் கை என்னும் ஒழுக்க நெறியில் அடங்குவன அல்ல.

அகம் 7 என்றால் புறமும் 7 தானே.

புறப்பொருள் வெண்பாமாலை தன்னிச்சையாக அகப்பொருளைப் பற்றிக் கருதிப்பார்க்காமல் புறத்திணையை 12 எனப் பாகுபாடு செய்து இலக்கணம் செய்து அந்த இலக்கணத்துக்குப் பண்டைய இலக்கியங்களில் மேற்கோள்கள் முழுமையாகக் கிடைக்காமையால் மேற்கோள் பாடல்களை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ளது. 

Tuesday, 15 April 2014

ஆவுதி வேள்வி


தீயில் ஆவியாக்குவது ஆவுதி. இதனை யாகம் என்பர்.

வேள் என்னும் சொல் உதவி செய்வதைக் குறிக்கும்
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - திருக்குறள்

வேள்வி என்பதும் வழங்குதலையே குறிக்கும்.
சங்ககாலத்தில் கொடை வழங்கிய பெருமக்கள் வேளிர் எனப்பட்டனர்.


சங்ககாலத்தில்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,

சேர வேந்தன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்

ஆகிய இருவரும் இருவகை ஆவுதி செய்தனர்.

1
பெரும்பெயர் ஆவுதி
தீயில் நெய் ஊற்றித் தேவர்களுக்கு வழங்குதல்
2
அடுநெய் ஆவுதி
சோற்றில் நெய் ஊற்றி மக்களுக்குப் பெருஞ்சோறு வழங்குதல்

புறநானூறு பாடல் 15
பதிற்றுப்பத்து பாடல் 21
ஆகியவற்றில் இந்தச் செய்திகள் உள்ளன

Sunday, 13 April 2014

தமிழில் வேற்றுமைப் பொருள்

பெயர், வினை என்பன மொழியின் அடிப்படை நிலைகள்.
பெயரை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை.
இதனைத் தமிழர் வரிசைக் குறியீடு செய்து காட்டியுள்ளனர்.

1 நம்மால் பெயரிடப்பட்டுள்ள பொருள் செயல்படுவது
Subject does
பால் ஒழுகிற்று - ஒழுகு என்பது செய்வினை

2 பொருள் செயப்படுபொருளாக வேறுபடுவது 
Subject is being done
பாலைக் குடித்தான் - குடி என்பது செயப்பாட்டுவினை
பால் குடித்தான்
3 பொருள் கருவியாக, உடனிகழ் கருவியாக வேறுபடுவது
Subject becomes instrument
Subject becomes doing along with
வாளால் வெட்டினான் - வெட்டு என்பது செயப்பாட்டுவினை
வாளுடன் வந்தான் - வாள் என்பது செய்வினை
4 பொருள் சேருமிடமாக வேறுபடுவது
Subject becomes recipient
அவனுக்குக் கொடு - கொடு என்பது செய்வினை
வடகிழக்கு - வடக்குக்குக் கிழக்கு
5 பொருளோடு ஒப்பிட்டு வேறுபடுத்துவது
Subject becomes ablative
அவனின் இவன் பெரியவன்
அவனிடமிருந்து வாங்கு
6 பொருளை உடைமையாக வேறுபடுத்துவது
Subject becomes genitive
அவனது கை
அவனது பண்பு
7 பொருளை இருப்பிடமாக வேறுபடுத்துவது
Subject becomes locative
அவனிடம் வாள் உண்டு
அவனிடம் பண்பு உண்டு
8 பொருளைக் கேட்கும் பொருளாக வேறுபடுத்துவது
Subject becomes vocative
கந்தா வா
கந்தா கொடு

இந்தப் படியடுக்கு தெளிவான பார்வையோடு ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பது தமிழரின் மொழியியல் புலமைக்கு எடுத்துக்காட்டு.

பெயர், வினை, இடை, உரி - அறிவது எப்படி?

Noun, Verb, Morpheme, Particle

மொழிகள் சொற்களைப் பெயர் என்றும், வினை என்றும் பாகுபடுத்திக்கொள்கின்றன. தமிழ் அவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளையும் தன் இயல்புக்கு ஏற்பச் செய்துகொண்டுள்ளது.
1
சில சொற்களுக்குப் பெயர் வைத்துள்ளோம் - இவை பெயர்ச்சொல்.
கல், மண், காற்று, நாள், வெள்ளை, மலை, கிளை, போதல்
2
பெயர் செயல்படுவதைக் குறிப்பது வினைச்சொல்
வா, போ, நட, தின், பாடு
3
பெயரோ, வினையோ அல்லாமல் பெயரோடும் வினையோடும் ஒட்டிக்கொண்டோ ஒட்டாமலோ இடைப்பட்டு வரும் சொல் இடைச்சொல்
4
பெயரோ வினையோ அல்லாமல் பெயருக்கோ, வினைக்கோ உரிமை பூண்டு வரும் சொல் உரிச்சொல்

இடைச்சொல்

பண்புகள்

1 புணர்ச்சியில் பொருள் கொள்ள உதவும்
இன் - ஆட்டினை, ஆட்டினால், ஆட்டினுக்கு
2 வினையில் காலம் காட்டும்
ன் - போயினான், போனான்
வ் - போவான்
கிறு - போகிறான்
3 வேற்றுமை உருபு
ஐ - கந்தனை
ஆல் - கந்தனால்
4 அசைநிலை
மியா = கேண்மியா
5 இசைநிறை
கடாஅக் களிற்றின் மேல் - திருக்குறள் - [அ] வெண்டளை இசை நிறைத்தல்
6 குறிப்புப் பொருள்
உம் - நீயும்
7 ஒப்பு
போல

தொல்காப்பியம் குறிப்பிடும் இடைச்சொல்

அந்தில், அம்ம, அரோ, ஆக, ஆகல், ஆங்க, ஆர், இக, இரும், ஈ,
உம், எல், எற்று, என, என்றா, என்று, எனா, ஏ, ஓ, ஔ,
கா, குரை, கொல், கொன், சின், தஞ்சம், தில்,
பிற, பிறக்கு, போ, போலும்,
மதி, மற்று, மற்றை, மன், மன்ற, மா, மாது, மியா, மோ, யா

உரிச்சொல் எப்படி இருக்கும்

தொல்காப்பிய விளக்கம்
1 இசையில் தோன்றும்
துவைத்தல் - வால்வளை துவைப்பவும் - சங்கு ஒலி
2 குறிப்பில் தோன்றும்
ஓஒ இனிதே - திருக்குறள் - ஓ - ஒலிக்குறிப்பு
3 பண்பில் தோன்றும்
கறுக்கொண்டு போரிட்டான் - கறு என்பது சினம்
செங்கண் - சிவப்பு நிறம் - பண்பு
4 பெயரில் இடம்பெறும்
அவனே வந்தான்
5 வினையில் இடம்பெறும்
வந்தானோ -
6 ஒருசொல் பல பொருளைக் குறிக்கும்
கடி என்னும் சொல் காப்பு, கூர்மை முதலான பொருளைத் தரும்
7 ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களாக வரும்
உரு, தவ, நனி என்னும் சொற்கள் மிகுதியைக் குறிக்கும்

தொல்காப்பியம் குறிப்பிடும் உரிச்சொல்

அதிர்வு, அயர்தல், அரி, அலமரல், அழுங்கல்
இசைப்பு, இயம்பல், இயைபு, இரங்கல், இரங்கல், இலம்பாடு, இன்னல்
உகப்பு, உசா, உயா, உரு, உரும், உவப்பு, உறு
எய்யாமை, எறுழ், ஏ, ஏற்றம், ஐ, ஒழுகல், ஒற்கம், ஓய்தல்
கடி, கதழ்வு, கம்பலை, கமம், கய, கருவி, கவர்வு, கவவு, கழிவு
கழுமு, கறுப்பு, குரு, குழ, கூர்ப்பு, கெடவரல், கெழு
சாயல், சிலைத்தல், சிவப்பு, சிறுமை, சீர்த்தி, செல்லல், செழுமை, சேர்
ஞெமிர்தல், ,தட, தவ, தா, தீர்த்தல், தீர்தல், துயவு, துவன்று
துவைத்தல், துனைபு, தெருமரல், தெவ்வு, தெவு
நம்பு, நளி, நனவு, நன்று, நனி, நாம், நொசிவு
பசப்பு, படர், பண்ணை, பணை, பயப்பு, ,பரவு, பழிச்சு, பழுது
பாய்தல், பிணை, புரை, புலம்பு, புனிறு, பெண், பேம், பையுள்
பொற்பு, போகல், மத, மல்லல், மழ, மாதர், மாலை
முரஞ்சல், முழுது, முனைவு, மே
யாண், யாணர், வம்பு, வய, வயா, வறிது
வார்தல், வாள், விதிர்ப்பு, ,வியல், விழுமம், விறப்பு, வெம்மை, வைSaturday, 12 April 2014

ஐ=அய், ஔ=அவ், சரியா, மாற்றி எழுதலாமா?

இவை மொழிமுதல் எழுத்தாக வரும்போது சரி.
மாற்றியும் எழுதப்பட்டது. எழுதலாம். - என்கிறார் தொல்காப்பியர்.

ஐயர் = அஇயர்
அகர இகரம் ஐகாரம் ஆகும் - மொழிமரபு 21
ஔவை =  அஉவை
அகர உகரம் ஔகாரம் ஆகும் - மொழிமரபு 22
ஐவனம் = அய்வனம்
ஔவை = அவ்வை
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என சினைமிசை மெய்பெறத் தோன்றும் - மொழிமரபு 23
தொல்காப்பிய உராயாசிரியர் இளம்பூரணர் எடுத்துக்காட்டு

தமிழில் ஔ எழுத்து மொழியின் இறுதி எழுத்தாக கௌ, வௌ என்னும் இரண்டு சொற்களில் மட்டுமே வரும்.

ஐ எழுத்து கலைஞன் என்னும்போது இடையிலும், வலை என்னும்போது கடையிலும் வரும்.

இடையிலும் கடையிலும் வரும்போது மாற்றி எழுதும் வழக்கம் இல்லை.
அறிஞர் சாலை இளந்திரையன் தன் பெயரைச் சாலய் இளந்திரய்யன் என எழுதிவந்ததோடு, தாம் எழுதிய நூல்களிலும் இந்த முறைமையைப் பினபற்றி வந்தார்.

இணையதள வெளிகளில் தமிழ் 99 தட்டச்சு முறையைப் பின்பற்றி அடிக்கும்போது vlr என்னும் மூன்று எழுத்துக்களைத் தட்டியதும் வலை என்னும் சொல் வந்துவிடும்.

தட்டச்சு இத்துணை எளிமையாக்கப்பட்டிருக்கிற இக்காலத்தில் தமிழ் மரபினை மாற்ற முனைவது வேண்டாத ஒன்று.

Tuesday, 8 April 2014

தட்டச்சு எளிமைக்கு Tamil99 தமிழ்99

தட்டச்சுத் திறவுப் பலகை keyboard பயன்படுத்தித் 'தூக்கெழுத்து' shift இல்லாமல் தமிழைப் பதிவாக்க முடியும்

க க என்று இரண்டு முறை அடித்தால் அது [க்க] எனத் தானே மாறிவிடும். பிற மெய்யெழுத்துகளையும் இவ்வாறு அடித்துப் பணியைக் குறைத்துக்கொள்ளலாம்.

ன ற என்று அடித்தால் ன்ற என்று அதுவே மாறிவிடும். இது போல ங க ,| ஞ ச, | ண ட | ந த | ம ப - என வரும் இணை எழுத்துக்களை அடிக்கும்போதும் மெல்லின எழுத்துக்களுக்குப் புள்ளி தானாகவே வந்துவிடும்.

இந்த எளிய முறைமை  இரண்டொரு நாளில் எளிமையாக எல்லாருடைய நினைவிலும் பதிவாகிவிடும்

பயன்படுத்திப் பயன்பெறுவோம்


தொல்காப்பியத்தில் இடைச்செருகல் - எவை

* தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலிலும் நூற்பாக்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன.
* இந்த ஒழுங்கடுக்கில் தொடர்பில்லாத சில நூற்பாக்கள் இடையில் வருகின்றன.
* அவற்றை அறிஞர்கள் இடைச்செருகல் எனக் குறிப்பிடுகின்றனர்.

முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.
மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85)
செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்
ஆக  24
மேலும்
அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு.

இவை இடைச்செருகல்களே
என்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம்
சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல்
பண்டைய உரையாசிரியர்களே 
புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி
முதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்

இடைச்செருகல் என்னும்போது
கருதிப் பார்க்க வேண்டிய கருத்துக்கள்

* பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர் பக்கம் - என்னும் பாகுபாடுகள்
74.'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது' என்மனார் புலவர் - தொல்காப்பியம் புறத்திணை-இயல்

அகப்பொருள் - திணைப்பகுப்பு எப்படி

நிகழ்வுச் செய்திகளை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி.
அகப்பொருளை அன்பின் ஐந்திணை எனக் குறிப்பிட்டு ஐந்து திணைகளாகப் பார்ப்பது வழக்கம். இந்தப் பாகுபாடு ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து வகுக்கப்படும். இது முதல்நிலை.

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே
தொல்காப்பியம் - அகத்திணை-இயல் 15

ஆண்-பெண் சேரும் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சி
பொருள் தேடவோ, வினையின் நிமித்தமாகவோ ஆண் பிரிவதும்
பெண் பெற்றோரை விட்டுக் காதலனுடன் பிரிவதும் பாலை
ஆண் பிரிவைப் பொறுத்துக்கொண்டு
அவன் வரவுக்காகக் காத்துக்கொண்டு இருத்தலைக் கூறுவது முல்லை
மனைவி கணவனுடன் பிணக்குப் போட்டுக்கொண்டு ஊடுதல் மருதம்
உறவுக் காதலன் வரவை எண்ணி மனம் இரங்குதல் நெய்தல்
திணைப் பாகுபாட்டுக்குக் கருப்பொருளும் உதவும்.
இது இரண்டாம் நிலை

சிதம்பரம் கோயிலில் மீன் சின்னம்

சிதம்பரம் கோயிலுக்குப் பாண்டியர் செய்த திருப்பணியை
உணர்த்ததும் நினைவுச் சின்னம்


படம் நன்றி
கல்வெட்டியல் அறிஞர் இராசகோபால் சுப்பையா

திருவானைக்காவல் பாண்டியர் செப்பேடு

திருவானைக்காவல் கோயிலுக்குப்
பாண்டியன் செய்த திருப்பணியை
நினைவூட்டுகிறது


படம் நன்றி - கலவெட்டியல் அறிஞர் இராசகோபால் சுப்பையா

குடுமியான்மலையில் மீன் சின்னம்

சங்ககாலப் பாண்டியருள் ஒருவன் 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
இவன் குடுமியான்மலையில் வெற்றித்தூண் நட்டான்
யூபம்
தேவர்களுக்கு விருந்தூட்டும் பெரும்பெயர் ஆவுதி செய்தான்
மாந்தர்க்குப் பெருஞ்சோறு வழங்கும் அடுநெய் ஆவுதி செய்தான்
புறம் 15 புலவர் நெட்டிமையார் பாடல்

இங்குப் பொறிக்கப்பட்டுள்ள மீன் சின்னம் பிற்ஃகாலத்தது என்றாலும் பாண்டிநாட்டுப் பகுதி என்பதைக் காட்டும் நினைவுச் சின்னடமாகும்.


படம் நன்றி - கல்வெட்டியல் அறிஞர் இராசகோபால் சுப்பையா

திருவண்ணாமலையில் பாண்டியர் மீன் - எப்படி

திருவண்ணாமலை தொண்டைநாட்டு ஊர்
மீன் பாண்டியர் சின்னம்
கோயில் சுவரில் மீன் சின்னம் எப்படி வந்தது
வரலாறு என்ன


* 7 ஆம் நூற்றாண்டு அப்பர் பாடியுள்ளார்
* காஞ்சி பல்லவர்கள் கட்டினர்
* 9 ஆம் நூற்றாண்டுச் சோழர் கல்வெட்டுகள் உள்ளன
* 14 (+ - 1328) ஆம் நூற்றாண்டு 'ஒய்சலர்' ஆட்சியின்போது அவர்களின் தலைநகர்.
* சாளுவ, துளுவ, விசயநகர அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
* தமிழ், கன்னட, சமற்கிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன குறிப்பு

பாண்டியர் சின்னம் கயல்மீனும் செண்டும்
இங்குப் புடைப்போவியமாக உள்ளன
இது மதுரை மீனாட்சி சொக்கநாதர் கதை ஓவியம் ஆகலாம்

படம் நன்றி - கல்வெட்டியல் அறிஞர் இராசகோபால் சுப்பையா

போசள மன்னன் பாண்டியனுக்கு முடிசூட்டும் காட்சி
ஓவியத்தில் உள்ளது - என
விளக்கம் தருகிறார்
கல்வெட்டியல் அறிஞர் இராசகோபால் சுப்பையா

Sunday, 6 April 2014

வகைவகையாக வாசல்கோலம் போடலாம்

இது 8 புள்ளிக் கோலம்

எத்தனைப் புள்ளியில்
எந்தெந்த மாதிரிக் கோலம் போடலாம்
பாருங்கள்
போடுங்கள்


Saturday, 5 April 2014

பெரிப்ளசு குறிப்பில் தமிழகம்

படங்கள்


கி.பி. முதல் நூற்றாண்டில் வந்த கிரேக்க மாலுமி எழுதிவைத்த குறிப்பு பெரிப்ளசு என்னும் பெயரில் தொகுத்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்த துறைமுகங்களைப் பற்றியும்
அவற்றின் ஏற்றுமதிப் பொருள்கள் பற்றியும்
அதில் குறிப்புகள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் துறைமுகங்கள்
மேலைநாட்டவர் குறிப்பில் இடம்பெற்றிருப்பது
வரலாற்றை ஒப்புநோக்க உதவும் சான்று.

மேலும் விளக்கம் இதனைச் சொடுக்கிக் காணலாம்

Wednesday, 2 April 2014

தாதப்பட்டி - கல்வெட்டு


அடியோன்பாகற்பாளிய் 

திண்டுக்கல் மாட்டம் நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டி என்னும் ஊரில் உள்ள கல் அதாவது நடுகல்

பதிவு - முனைவர் பவானி

கல்வெட்டு எழுத்து தமிழ்ப் பிராமி
எழுத்துக்களைப் படித்துள்ள எழுத்துப் பெயர்ப்புகளில் குறைபாடுகள் உள்ளன என்பதை அறிஞர்கள் அறிவர்.

புலிமான் கோம்பை - சங்ககால நடுகல்


பதிவு - முனைவர் மு பவானி

இந்த மூன்று கல்வெட்டுகளும் தேனி மாவட்டம் புலிமான் கோம்பை என்னும் ஊரில் உள்ளவை.

பொறிக்கப்பட்டுள்ள எழுத்து தமிழ்ப்பிராமி

காலம் -

கல் என்னும் சொல் சங்கப்பாடல்களில் நடுகல்லைக் குறிக்கும்.
1
மேலே காட்டப்பட்டுள்ள உடைந்துபோன கல்வெட்டில் மேல் வரியில் உள்ள பெயர் அதன் என்று படிக்கப்பட்டுள்ளது.
இது ஆதன் எனப் படிக்கும் அளவுக்கு உள்ளது.
ஆதன் என்பது சங்ககாலத்தில் பெரிதும் புழக்கத்தில் இருந்த சொல்.
ஆதன் என்பது மூச்சு.
பூதன் என்பது ஐம்பூதங்களின் கூட்டாக அமைந்துள்ள உடல்.

2
இடையில் உள்ள கல்வெட்டில் அவ்வன் என்னும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவ்வை (ஔவை) என்னும் பெண்பால் சொல்லுக்கு இணையான ஆண்பால் பெயர்.

3
அடியில் உள்ள கல்வெட்டில் காணப்படும் பெயர் அந்தவன் எனப் படிக்கப்படுகிறது. இது அந்துவன் என்னும் பெயரில் தோன்றிய எழுத்துப் பிழை.

அண்டவெளி இன்று

ஒளி, உரு, சூடு முதலானவற்றின் அடக்கம் அண்டம்.
அண்டத்தின் ஒரு பகுதி அண்டவெளி.
மோரிசான் கோளரங்கம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் வியாழக் கிழமை காட்டும் முப்பரிமான அண்டவெளித் தோற்றத்தின் படத்தை வெளியிடுகிறது.
இது இது 2014 ஏப்பிரல் மாதம் வெளியிட்ட படம்.அவ்வப்போது தோன்றும் படத்தை இதனைச் சொடுக்கிக் காணலாம். 

அண்டம் தோன்றியது

அண்டம் தோன்றியது பற்றிய அறிவியல் கணிப்பு இது.


இதன் விளக்கத்தை இதனைச் சொடுக்கி உள்ளே சென்று காணலாம்

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.