Sunday, 21 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1560


ஆவடுதுறை அமணர் மறைத்த சிவன்
 • திருவாய்மூரில் இருக்கும்போது குலச்சிறையார் ஞானசம்பந்தரைக் கண்டார். மதுரைக்கு வரவேண்டும் என அழைத்தார். தீங்கேதும் உளவோ என்று ஞானசம்பந்தர் வினவினார். \ 1551 \ 5.1.285
 • அதணர் செயல்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை – என்றார் குலச்சிறையார். \ 1552 \ 5.1.286
 • அப்போது நாவுக்கரசர் - கலகம் செய்யும் அமணர் மாயம் செய்ய வல்லவர். எனக்கு அவர்கள் செய்ததைச் சொல்ல விரும்பவில்லை – என்றார். \ 1553 \ 5.1.287
 • சமணரை அழித்து, சைவத்தை நிலைநாட்டாமல் ஒன்றும் செய்யமாட்டேன் – என்றார் ஞானசம்பந்தர். \ 1554 \ 5.1.288
 • நானே சென்று சமணர் மாயையை அழித்து வருகிறேன் – என்று நாவுக்கரசர் கூறியதை ஞானசம்பந்தர் ஏற்காததால் நாவுக்கரசர் மறுக்கவில்லை. \ 1555 \ 5.1.289
 • ஞானசம்பந்தர் போன பின்னர் நாவுக்கரசர் திருவீழிமிழலை திரும்ப எண்ணினார். \ 1556 \ 5.1.290
 • நாகைக்-காரோணம் பாடிய பின் மிழலை வந்தார். \ 1557 \ 5.1.291
 • பிற பதிகளையும் பணியும் காதல் தோன்றியது. \ 1558    5.1.292
 • ஆவடுதுறை பணிந்தார். ஒவ்வொரு பாட்டுக்கும் ஆயிரம் பொன் பெற்றதை இனி போற்றுவோம். \ 1559 \ 5.1.293
 • பழையாறை வந்தார். வடதளியில் அமணர் மறைத்து வைத்திருந்த சிவனைக் கண்டு தொழுதார். அவர்கள் கோயில் விமானத்தை மறைத்து வைத்திருந்தது கேட்டு மனம் புழுங்கினார். \ 1560 \ 5.1.294

பாடல்

1551 
வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத் தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் 5.1.285

1552 
சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதி சைவ நெறி விளங்கத்
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர்     5.1.286

1553 
ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார்   5.1.287

1554 
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார்    5.1.288

1555 
போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத்
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார்  5.1.289

1556 
வேணுபுரக் கோன் எழுந்ருள விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்    5.1.290

1557 
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்காரோணம் பிறவும் தாம் பணிந்து
சாலும் மொழி வண் தமிழ்ப்பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார்    5.1.291

1558 
வீழிமிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில் தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத்
தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார்     5.1.292

1559 
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக்கரசர் ஞானப் போனகர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார் 5.1.293

1560 
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்ட ற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி    5.1.294
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1550


திருவாய்மூர்
 • திறக்க அரிதில் பாடினேன். அடைக்க எளிதில் பாடினார் – என்று எண்ணியவாறு நாவுக்கரசர் இருந்தார். \ 1541 \ 5.1.275
 • அப்போது சிவபெருமான் திருநீற்றுக் கோலத்துடன் தோன்றி, “வாய்மூர் வா, இருப்போம்” என்றார். \ 1542 \ 5.1.276
 • வழி காட்டிக்கொண்டு சென்ற ஆதி மூர்த்தியை நாவுக்கரசர் பின்தொடர்ந்தார். \ 1543 \ 5.1.277
 • அவரைப் பற்ற முடியவில்லை. \ 1544 \ 5.1.278
 • கோயில் ஒன்றைக் காட்டி மறந்தார். நாவுக்கரசு செல்வது அறிந்து ஞானசம்பந்தரும் பின்தொடர்ந்தார். \ 1545 \ 5.1.279
 • கதவை மூடப் பாடியதால் எனக்குக் காட்சி தரவில்லை – என்று ஞானசம்பந்தர் வருந்தினார். \ 1546 \ 5.1.280
 • “பாட அடியார்” – என்று அடியெடுத்து நாவுக்கரசர் பதிகம் பாடினார். \ 1547 5.1.281
 • திருவாய்மூர் வணங்கிப் பாடினார். \ 1548 \ 5.1.282
 • இருவரும் வாய்மூர் அடிகளைப் போற்றிப் பாடினர். \ 1549 \ 5.1.283
 • வாய்மூரில் இருவரும் இருக்கும்போது, வளவன் மகள், தென்னன் மனைவி, பாண்டிமாதேவி அமைச்சர் குலச்சிறையாரை, ஞானசம்பந்தரை அழைத்து வரும்படி, தூது அனுப்பியிருந்தார். குலச்சிறையார் வந்து ஞானசம்பந்தரைக் கண்டார். \ 1550 \ 5.1.284

பாடல்

1541 
அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்    5.1.275

1542 
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார்  5.1.276

1543 
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள   5.1.277

1544 
சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தாவாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால்  5.1.278

1545 
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்  5.1.279

1546 
அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என  5.1.280

1547 
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்   5.1.281

1548 
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார்  5.1.282

1549 
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்  5.1.283

1550 
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டிமா தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண     5.1.284
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1540


கதவம் திறக்கப் பாடியது
 • மறைக்காட்டுக் கோயில் கதவம் குடமுழுகுச் செய்த நாளுக்குப் பின் திறக்கப்படாமல் பூட்டப்பட்டே இருந்தது. \ 1531 \ 5.1.265
 • மக்கள் ஒரு புழைவாயில் ஒன்றின் வழியாகச் சென்று வழிபட்டு வந்தனர். \ 1532 \ 5.1.266
 • இதனை அறிந்த ஞானசம்பந்தர் நாம் நேரே சென்று வழிபடக் கதவம் திறக்குமாறு பாடும்படி நாவுக்கரசரை வேண்டினார். \ 1533 \ 5.1.267
 • “பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ” என்று விளித்துத் கதவம் திறக்க வேண்டிப் பாடினார். \ 1534 5.1.268
 • மணிக்கதவம் திறந்து கொண்டது. கண்ட அனைவரும், ஞானசம்பந்தரும் நாவுக்கரசரைத் தொழுதனர். \ 1535 \ 5.1.269
 • இருவரும் அடியாருடன் உள்ளே சென்று வழிபட்டுத் தமிழ்மாலைகள் பாடினர். வெளியே வந்தனர். \ 1536 \ 5.1.270
 • கதவம் அடைக்கும்படிப் பாடவேண்டும் என்று ஞானசம்பந்தரை நாவுகரசு வேண்டினார். \ 1537 \ 5.1.271
 • ஞானசம்பந்தர் பாடினார். கதவம் காப்பிட்டுக்கொண்டது. \ 1538 \ 5.1.272
 • இருவரும் பதிகம் பாடினர். \ 1539 \ 5.1.273
 • அடியார் அனைவரும் வியந்து இருவரையும் தொழுதனர். இருவரும் மடத்துக்குச் சென்றனர். \ 1540 \ 5.1.274

பாடல்

1531 
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக்காப்புச் செய்த அந்நாள் முதல் இந் நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார்     5.1.265

1532 
தொல்லை வேதம் திருக்காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார் 5.1.266

1533 
ஆங்கு அப்பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத்
தேங்காது இருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர் 5.1.267

1534 
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரும் மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்  5.1.268

1535 
வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்தது ம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் 5.1.269

1536 
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி
என்புகரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்     5.1.270

1537 
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என  5.1.271

1538 
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல் காள கண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக்காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில் 5.1.272

1539 
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்    5.1.273

1540 
அங்கு நிகழ்ந்தஅச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்    5.1.274
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.